சலிப்புத் தட்டிய பேஸ்புக்: ஆய்வில் வெளியாகிய தகவல்
17 ஆனி 2018 ஞாயிறு 11:18 | பார்வைகள் : 9072
அன்றாடத் தகவல்கள் குறித்து விவாதிக்கப் பலர் ஃபேஸ்புக்கை விடுத்து, வாட்ஸ் ஆப் (WhatsApp) போன்ற செயலிகளை நாடுவதாக அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது.
தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு குறித்த அக்கறை, பொய்த் தகவல்கள், மோசமான விவாதங்கள் ஆகியவை அதற்குக் காரணங்கள் என்று ஆய்வு சொன்னது.
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இதழியல் கழகம் அண்மையில் அது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. ஃபேஸ்புக் வாயிலாக செய்திகளைத் தெரிந்துகொள்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாய் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசியல் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிப்பது சில நாடுகளில் ஆபத்தாக முடியலாம். அதனால், தெரிந்தவர்களிடையே பேசிக்கொள்வது பலருக்குச் சௌகரியமாய் இருப்பதாகக் கூறப்பட்டது.
நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் இடையில் உள்ள பிணைப்பை வலுப்படுத்த ஃபேஸ்புக் அதன் உத்திகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால் செய்திகளிலிருந்து மக்கள் கவனம் திசை திரும்பியதற்கு அது மட்டும் காரணமல்ல; மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையின்மையே முக்கிய காரணம் என்கின்றன ஆய்வு அமைப்புகள்.