வாழைக்காய் குழம்பு
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10119
வாழைக்காய் குழம்பு மிகவும் சுவையான குழம்புகளில் ஒன்று. இந்த குழம்பு, அசைவ குழம்புகளில் சுவையைக் கொடுக்கக்கூடியது. மேலும் வாழைக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஆகவே அத்தகைய வாழைக்காயை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது அந்த வாழைக்காயை கொண்டு எப்படி எளிமையான முறையில் குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/4 கப்
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
பட்டை - 1
கிராம்பு - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பபிலை - சிறிது
எண்ணெய் - தேவையான
அளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைக்காயின் தோலை சீவி விட்டு, அதனை வட்டமாகவோ அல்லது விருப்பமான வடிவிலோ நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா மற்றும் முந்திரி போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் மட்டும் இருக்குமாறு பார்த்து, மீதமுள்ளவற்றை எடுத்துவிட்டு, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து, 6-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான வாழைக்காய் குழம்பு ரெடி!!!