YouTube அறிமுகப்படுத்தும் புதிய அதிரடி திட்டம்..!
6 பங்குனி 2017 திங்கள் 12:52 | பார்வைகள் : 8714
வலைத்தளமூலமாக பல்வேறு காணொளி காட்சிகளை பதிவேற்றியுள்ள யூ டியூப் (You Tube) நிறுவனம், தற்போது அடுத்த கட்ட அதிரடி திட்டமாக தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் பெரும்பான்மையாக பயன்படுத்தி வரும் யூ டியூப் வலைத்தள காணொளி சேவையானது, தற்போது கட்டண முறையிலான தொலைக்காட்சி சேவையை தொடங்கவுள்ளதாக, யூ டியூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சூசன் வோஜிகி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை மையப்படுத்தியதாக உருவாக்கப்படவுள்ள குறித்த தொலைக்காட்சி சேவையில், சுமார் 40 அலைவரிசைகளை ஒளிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தொலைகாட்சி சேவைக்காக மாதமொன்றிற்கு 35 அமெரிக்கா டொலர்கள் கட்டணமாக அறவிடப்படுமென்பதோடு, அமெரிக்காவின் முன்னணி ஒளிபரப்பு சேவை முகவர்கள், பிரபலமான சர்வதேச ஒளிபரப்பு சேவைகள் மற்றும் விளையாட்டு ஒளிபரப்புகள் என பல்வேறு வகைகளில் செயற்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளுக்கு சொந்தமான யூ டியூப் நிறுவனத்தின் காணொளி சேவையை, உலகலாவிய ரீதியில் தினமும் 1 பில்லியன் மணித்தியாலயங்கள் பயன்படுத்திவரும் நிலையில், தற்போது கூகுள் நிறுவனம், யூ டியூப் ஊடாக தொலைக்காட்சி சேவையை உருவாக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.