பெயர் மாற்றப்படும் YAHOO?
10 தை 2017 செவ்வாய் 15:51 | பார்வைகள் : 8788
இணையவழித் திருட்டுக்கு ஆளான யாஹூ நிறுவனத்தை வெரிசன் நிறுவனம் சுமார் எழுபதாயிரம் கோடி ரூபாவுக்கு வாங்கவுள்ளது.
கடந்த ஆண்டு யாஹூ நிறுவனம் இரண்டு முறை முடக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களின் தகவல்கள் உட்பட, யாஹூவின் தகவல்கள் பலவும் திருடப்பட்டன. இதையடுத்து யாஹூவின் பங்கு முகப் பெறுமதியும் திடீரென வீழ்ச்சி கண்டது.
இந்த நிலையில், தனது நிறுவனத்தின் கணிசமான பகுதியை விற்று விட யாஹூ முடிவு செய்துள்ளது. இதன்படி, சுமார் எழுபதாயிரம் கோடி ரூபாவுக்கு யாஹூவின் பெரும் பங்குகள் வெரிசன் நிறுவனத்துக்கு கைமாறவுள்ளன.
இந்த விற்பனைக்குப் பின் யாஹூவின் பெயர் நிலைத்திருக்குமா, மாறுமா என்பது தெரியாத நிலையில், விற்கப்பட்ட பங்குகள் தவிர்ந்த ஏனைய பங்குகளுடன் அமையவுள்ள புதிய நிறுவனத்துக்கு அல்டபா இங்க் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
யாஹூவின் விற்பனைக்குப் பின் பதவி விலகவுள்ள அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மேரிஸ்ஸா மேயர், எஞ்சிய பங்குகள் அடங்கிய அல்டபா இங்க் நிறுவனத்தில் தொடர்ந்தும் அதே பதவியில் நீடிப்பார் என்றும் தெரியவருகிறது.
அல்டபாவின் பங்குகளில் 15 சதவீதத்தை சீனாவின் இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா குழுமமும், 35.5 சதவீதத்தை யாஹூ ஜப்பான் நிறுவனமும் வாங்கியுள்ளன.