Facebook அறிமுகம் செய்யும் புதிய வசதி!
29 மார்கழி 2016 வியாழன் 13:32 | பார்வைகள் : 8926
லைவ் வீடியோக்களை வெற்றிகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தற்போது லைவ் ஆடியோ அம்சத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. பாரம்பரிய வானொலி போல பயனர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் நிகழ் நேர ஒலிப்பதிவை ஒலிபரப்ப முடியும்.
ஃபேஸ்புக் லைவ் போன்றே, இதிலும், ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அதில் பின்னூட்டமிடலாம், கேள்விகள் கேட்கலாம், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம், மற்றவர்களுடனும் அந்த ஒலிப்பதிவை பகிரலாம்.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக வலைப்பதிவு செய்துள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் ஷிர்லி மற்றும் பாவனா ராதாகிருஷ்ணன், "பயனர்கள் சில விஷயங்களை வீடியோவாக அல்லாமல், வெறும் வார்த்தைகளால் மட்டுமே சொல்ல வேண்டும் என நினைப்பார்கள். இந்த லைவ் ஆடியோ அம்சம் அவர்களின் விருப்பத்தை எளிதாக்கும். தாங்கள் விரும்பிய வடிவத்தில் (format) அதை ஒலிபரப்பலாம்.
நிகழ் நேர ஒலிபரப்பு அல்லது ஒளிபரப்பில் மேலும் சில அம்சங்களை எங்கள் பார்ட்னர்கள் விரும்புகின்றனர் என்பதை அறிந்தோம். சென்ற வாரம் லைவ் 360 அறிமுகம் செய்யப்படது. இன்று மற்றொரு லைவ் அம்சத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
சில சூழ்நிலைகளில், வலுவான நெட்வர்க் இணைப்பு இல்லாத இடங்களில் இருந்தும் லைவ் அம்சத்தை பயன்படுத்த நேருகிறது. அந்த நேரங்களில், பயனர்களுக்கு நாங்கள் சிக்னல் பலவீனமாக உள்ளது என எச்சரிக்கை செய்வோம். அதே நேரத்தில், லைவ் ஆடியோ அம்சம் குறைந்த சிக்னல் இருக்கும் பகுதிகள் செயல்படும் அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆண்ட்ராய்ட் கருவிகள் பயன்படுத்தும் பேஸ்புக் பயனர்கள், ஃபேஸ்புக் செயலியிலிருந்து வெளியேறினாலும், மொபைலை லாக் செய்தாலும் ஒலிபரப்பை கேட்க முடியும். ஆப்பிள் கருவிகள் பயன்படுத்தும் பயனர்கள், ஒலிபரப்பை கேட்டுக்கொண்டே பேஸ்புக்கின் மற்ற பக்கங்களை படிக்க முடியும்.
அடுத்த சில வாரங்களில், இந்த லைவ் ஆடியோ அம்சம், பிபிசி, எல்பிசி, ஹார்ப்பர் காலின்ஸ் உள்ளிட்ட பேஸ்புக் பார்ட்னர் நிறுவனங்களின் பக்கங்களில் பரிசோதிக்கப்படும். 2017 ஆரம்பத்தில் பொது மக்களுக்கு இந்த அம்சம் பயன்பாட்டில் வரும் எனத் தெரிகிறது.