வெப் கேம் மூலம் பயனாளர்களைக் கண்காணிக்கும் Facebook! அவதானம்
9 ஆனி 2017 வெள்ளி 15:04 | பார்வைகள் : 8992
வெப் கேம் மற்றும் ஸ்மார்ட் போன் கேமிரா மூலம் பயனாளர்களைக் கண்காணிக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் பக்கத்தை திறந்தவுடன் தோன்றும் நியூஸ் ஃபீடில் ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ பார்க்கும்போது பயனாளாரின் முகபாவனையை கேமிரா மூலம் கண்காணித்து அதுதொடர்பான அதிகப்படியான விஷயங்களை அளிப்பது தொடர்பான அல்காரிதத்தினை அந்நிறுவனம் வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அல்காரிதத்துக்கு காப்புரிமை கோரி அமெரிக்க அரசிடம் ஃபேஸ்புக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
உதாரணமாக உங்கள் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் உங்கள் நண்பர் ஒருவரின் புகைப்படத்தைப் பார்த்து நீங்கள் புன்னகைத்தால், அதனை கேமிரா மூலமாக ஃபேஸ்புக் இனம் கண்டுகொள்ளும். அதன் பின்னர், உங்கள் நண்பரின் புகைப்பட பதிவுகள் நியூஸ் ஃபீடில் அதிகமாக இடம்பெறும் வகையில் ஃபேஸ்புக் பார்த்துக்கொள்ளும். அதேபோல, விலங்குகள் இடம்பெற்றுள்ள வீடியோ ஒன்றினைப் பார்த்து நீங்கள் முகம் சுழித்தால், அதுபோன்ற வீடியோக்கள் உங்கள் நியூஸ் ஃபீடில் இடம்பெறாத வகையில் ஃபேஸ்புக் பார்த்துக் கொள்ளும்.
ஒவ்வொரு பயனாளரும் ஃபேஸ்புக்கில் செலவிடும் நோக்கிலேயே இந்த அல்காரிதம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தினை ஃபேஸ்புக் நிறுவனம் செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை எனினும், இது செயல்பாட்டுக்கு வந்தால் தனிநபரின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று இப்போதே சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளன.