Paristamil Navigation Paristamil advert login

iPhone ஐ ஊடுருவும் இரகசிய மென்பொருளால் சர்ச்சை!

iPhone ஐ ஊடுருவும் இரகசிய மென்பொருளால் சர்ச்சை!

27 மாசி 2016 சனி 20:32 | பார்வைகள் : 9284


 iPhone ஐ ஊடுருவி அதிலுள்ள ரகசியத் தகவல்களைப் பெறும் மென்பொருளை உருவாக்குமாறு நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து, அப்பிள் நிறுவனம் மேல் முறையீடு  செய்துள்ளது.

 
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
 
தாக்குதல் நிகழ்த்திய தம்பதியில் ஒருவரின் iPhone ஐ FBI புலனாய்வு அமைப்பு ஊடுருவுவதற்கு வசதியாக ஒரு மென்பொருளை உருவாக்குமாறு அப்பிள் நிறுவனத்திற்கு கலிஃபோர்னியா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை எதிர்த்து அப்பிள் நிறுவனம் மாகாண ஃபெடரல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
 
அதில் ஒரு குறிப்பிட்ட iPhone இலுள்ள ரகசியத் தகவல்களைப் பெறுவதற்காக FBI கேட்கும் ஊடுருவல் மென்பொருளை உருவாக்கினால், அதனைக்கொண்டு பிற iPhone களையும் ஊடுருவி, அதிலுள்ள இரகசியத் தகவல்களைப் பெறுவதைத் தடுக்க முடியாது. இது, அமெரிக்க அரசியல் சாசனம் அளித்த அடிப்படைத் தனியுரிமைக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் எங்கள் நிறுவனத்தை வற்புறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு
உரிமை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
கலிஃபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில், கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட ரிஸ்வான் ஃபரூக், தஷ்ஃபீன் மாலிக் தம்பதி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டதில், 14 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
 
தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில், ரிஸ்வான் ஃபரூக்கின் iPhone இல் உள்ள பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பெற அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI முயற்சி செய்து வருகிறது.
 
இதற்காக, அந்த செல்லிடப்பேசிக்குள் ஊடுருவி, இரகசியத் தகவல்களைப் பெறுவதற்கான மென்பொருளை உருவாக்கும்படி, iPhone தயாரிப்பாளரான அப்பிள் நிறுவனத்தை FBI கேட்டது.
 
அதற்கு அப்பிள் நிறுவனம் மறுப்புத் தெரிவிக்கவே, FBI அமைப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகியிருந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்