Paristamil Navigation Paristamil advert login

​விண்வெளி பயணத்திற்கான பிரத்தியேக விமானம் தயாரிப்பு

​விண்வெளி பயணத்திற்கான பிரத்தியேக விமானம் தயாரிப்பு

20 மாசி 2016 சனி 16:12 | பார்வைகள் : 8877


 விண்வெளியில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் பயணம் செய்வதற்கு ஏதுவான புதிய விமானத்தை அமெரிக்காவின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தயாரித்துள்ளது. 

 
இந்த விமானம் பொதுமக்களின் பார்வைக்காக கலிஃபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.
 
அமெரிக்காவில் செயல்படும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் விண்வெளியில் சுற்றுப் பயணம் செய்வதற்கான புதிய விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. சாதாரணமாக வானில் பறக்கும் விமானங்கள் பத்து கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியவை என்ற நிலையில், விர்ஜின் கேலக்டிக் தயாரித்துள்ள இந்த விமானம் 100 கிலோ மீட்டர் உயரத்துக்கும் மேலே பறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு இதே நிறுவனம் தயாரித்த மற்றொரு விமானம் நடுவானில் பறக்கும் போது விபத்துக்குள்ளாகியது. அதன் பிறகு சுமார் 16 மாதங்கள் கழித்து அதே போல் மற்றொரு புதிய விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சர்ட் ப்ரான்சனின் (Richard Branson) மகள் வழிப் பேத்தி, ஒரு பால் பாட்டிலை உடைத்து விமானத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். 
 
தொடர்ந்து பலவித சோதனைகளுக்கு உட்படுத்தப்படவிருக்கும் இந்த விமானம் வணிக ரீதியிலான பயணத்தைத் தொடங்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என கருதப்படுகிறது.
 
இரண்டு விமானிகள் மற்றும் 6 பேர் மட்டும் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் பயணம் செய்ய ஏற்கனவே 700-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து வைத்துள்ளனர். ஒரு நபருக்கு சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்