நேரக் கணிப்பில் புதிய மாற்றம்!
8 ஆடி 2016 வெள்ளி 19:09 | பார்வைகள் : 9392
உலக நேரத்தில் புதிய மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது.
பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம்.
ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம் கணக்கிடப்படுகிறது.
எனினும், அதிநவீன ‘அணுவியல் கடிகாரங்கள்’ கண்டிபிடிக்கப்பட்ட பிறகு பூமியின் சுழற்சியை சாராமலேயே நேரம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனாலும் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 மில்லி விநாடிகள் மெதுவாகச் சுழல்கிறது.
இதன் காரணமாக, 500 முதல் 750 நாள் கால அளவில் பூமி சுழற்சியின் அடிப்படையிலான நேரத்திற்கும், துல்லியமான அணுவியல் கடிகார நேரத்திற்கும் சுமார் ஒரு விநாடி வேறுபாடு காணப்படுகிறது.
இதை ஈடு செய்ய உலகக் கடிகாரங்களில் ஒரு விநாடி கூடுதலாக சேர்க்கப்படுகிறது. அதாவது, அந்த ஆண்டின் ஏதாவது ஒரு நிமிடத்திற்கு 61 விநாடிகள் இருக்கும்.
இந்த வேறுபாட்டை அவ்வப்போது சரி செய்து கொள்வதற்கான சர்வதேச ஒப்பந்தம் கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு பராமரித்து வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு, இந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 11 மணி 59 நிமிடம், 59ஆவது விநாடிக்குப் பிறகு கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக 11.59.59 மணிக்கு அடுத்த விநாடியும் 11.59.59 மணியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 1972ஆம் ஆண்டில் இருந்து இதுவரை உலகக் கடிகாரங்களில் 26 முறை விநாடிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியாக கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி ஒரு விநாடி சேர்க்கப்பட்டது.
இவ்வாறு சேர்க்கப்படும் விநாடி “லீப்” விநாடி என அழைக்கப்படுகிறது. உலகக் கடிகாரங்கலில் கூடுதல் விநாடிகள் சேர்க்கப்படும் போதெல்லாம், பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருகிறது.
அதனால் தான் விநாடிகள் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. இப்படியே போனால் சில நூற்றாண்டுகளில் “பூமி சுழல்வது நின்று விடும்” என்ற பேச்சுகள் எழுகின்றன.