பெண்களின் அழகை கெடுக்கும் பேஸ்புக்?
22 சித்திரை 2014 செவ்வாய் 17:18 | பார்வைகள் : 9641
பெண்கள் பேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் அவர்களின் தோற்றப் பொலிவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் முகப்புத்தகத்தில் இருப்பவர்கள் மனத்தில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றன என்றும் அவர்கள் தங்களது தோற்றத்தை மற்றவர்களுடன் அதிகமாக ஒப்பிடுவதாகவும் இந்த ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு 881 பெண்கள் மத்தியில் நடத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள்? உடற்பயிற்சி செய்கின்றீர்களா? போன்ற வினாக்களும் அவர்கள் உருவம் தொடர்பான கேள்விகளும் இவர்களிடம் கேட்கப்பட்டுள்ளன.
கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் நேரம் தவறி உண்பதற்கும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரடியான தொடர்பு இல்லை என இந்த ஆய்வு கூறுகின்றது.
எனினும் அதிக நேரம் இத்தகைய வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடப்பவர்களின் தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏற்படுவதாக ஸ்கொட்லாந்தின் ஸ்ட்ரேத்க்ளைட் பல்கலைக்கழகத்தின் பெட்யா எக்ளர் என்னும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முகப்புத்தகத்தில் இருக்கும் பெண்கள் பிறர் தங்களது புகைப்படத்தினை பகிரும் போது அந்த உருவத்துடன் தங்களது உருவத்தை ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறார்கள. இதனால் அவர்கள் மனத்தில் அதிகமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றன என்கிறார் ஒஹியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூசுப் கல்யாங்கோ என்ற ஆய்வாளர்.
தமது உடல் எடை குறைய வேண்டும் என நினைக்கும் பெண்கள் தான் அதிகம் பேஸ்புக்கில் நேரத்தைப் செலவிடுவதாக இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்படி அதிக நேரத்தைச் சமூக வலைதளத்தில் போக்குவதால் அவர்களின் தோற்றப் பொலிவு மங்கிவிடுகிறது.
தோற்றம் சரியாக இல்லை என்று எண்ணி இவர்கள் மன வருத்தம் அடைகிறார்கள். இதனால் உணவு உண்பதில் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அது அவர்களது மனநிலையிலும் உடலிலும் ஆரோக்கியக் குறைவை உருவாக்குகிறது என்கிறது அந்த ஆய்வு.
இந்த ஆய்வு அறிக்கை வொஷிங்டன்னில் உள்ள சியாட்டலில் நடைபெறவுள்ள 64 ஆவது சர்வதேச தகவல் தொடர்பு கூட்டமைப்பின் கருத்தரங்கில் சமர்பிக்கப்படவுள்ளது.