'வட்ஸ் அப்' நிறுவனம் ஃபேஸ்புக் வசம்
21 மாசி 2014 வெள்ளி 15:39 | பார்வைகள் : 8964
வட்ஸ் அப் நிறுவனத்தை 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கவுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவோர் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு வார்த்தை வட்ஸ் அப் குறுந்தகவல், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்துகொள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி (app) இது.
தினமும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேரால் வட்ஸ் அப் செயலியில் இணைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொலைபேசியில் இணைய சேவை இருந்தால் எந்த நாட்டில் இருக்கும் நண்பரையும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம்.
வட்ஸ் அப் வெளியான சில வருடங்களுக்கு பின்னரே ஃபேஸ்புக் நிறுவனம், அதன் பயனர்களுக்கான பிரத்தியேக செயலியான ஃபேஸ்புக் மெஸென்ஜரை அறிமுகப்படுத்தியது. வட்ஸ் அப்இன் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது அந்நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது.
தொடர்ந்து வட்ஸ் அப் தன்னிச்சையாக செயல்படும் என்றும், அதன் பெயர் மாற்றப்படாது எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும், வட்ஸ் அப் இணை நிறுவனர் யான் கூம், ஃபேஸ்புக்கின் இயக்குனர்களில் ஒருவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஃபேஸ்புக் மெஸென்ஜரும் தனித்து செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“நூறு கோடி மக்களை இணைக்கும் பாதையில் வட்ஸ் அப் பயணித்து வருகிறது. அந்த மைல்கல்லை எட்டும் எந்த சேவையும் மதிப்பு வாய்ந்தது” என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.