பன்னீர் ரொட்டி ரோல்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9780
பன்னீர் ரொட்டி ரோலை பலவாறு செய்யலாம். அதில் பொதுவாக மைதா மாவை கொண்டு தான் செய்வோம். ஆனால் இந்த பன்னீர் ரொட்டி ரோலில் தாய் ரைஸ் பேப்பரைப் பயன்படுத்தி செய்யப் போகிறோம். இந்த பன்னீர் ரொட்டி ரோல் ஒரு சிறந்த காலை உணவும் கூட. அந்த அளவில் இதன் செய்முறை மிகவும் எளிமையானதாக இருக்கும். சரி, இப்போது அந்த பன்னீர் ரொட்டி ரோலின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பன்னீர் துண்டுகள் - 1 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
சோள மணிகள் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 6-7 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தாய் ரைஸ் பேப்பர் - 10-12
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின்னர் தக்காளி, மிளகாய் தூள், சோள மணிகள், தக்காளி சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி விட்டு, பன்னீர் துண்டுகளை சேர்த்து, 4-5 நிமிடம் பிரட்டி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அடுத்து ஒவ்வொரு ரைஸ் பேப்பராக நீரில் 5 நொடி ஊற வைத்து, சுத்தமான துணியில் வைத்து, ரைஸ் பேப்பர் மென்மையாகும் வரை செய்ய வேண்டும்.
பிறகு ஒரு ரைஸ் பேப்பரின் நடுவில் வதக்கி வைத்துள்ள பன்னீர் கலவையை சிறிது வைத்து, அதன் மேல் மற்றொரு ரைஸ் பேப்பரை வைத்து, முனைகளை தண்ணீர் கொண்டு மூடி, பின் அதனை ரோல் போல் சுருட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து பேப்பர்களையும் செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த ரோல்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான பன்னீர் ரொட்டி ரோல் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.