ஆண்களின் பிறப்புறுப்பு ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை! விஞ்ஞானிகள் சாதனை
11 ஐப்பசி 2014 சனி 18:14 | பார்வைகள் : 9626
ஆண்களின் பிறப்புறுப்பை ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக விருத்தி செய்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பிறப்புறுப்பை எதிர்வரும் 5 வருட காலத்துக்குள் மனிதர்களுக்கு பொருத்தி பரிசீலிக்க முடியும் என மேற்படி ஆய்வில் பங்கேற்ற வட கரோலினாவிலுள்ள மீள் விருத்தி மருத்துவத்துக்கான வேக் பொரெஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பிறப்புறுப்பில் கடும் காயங்களுக்கு உள்ளானவர்களுக்கும் அந்த உறுப்பில் புற்று நோய் தொடர்பில் அறுவைச் சிகிச்சைக்குள்ளானவர்களுக்கும் ஏனைய பாதிப்புக்களுக்குள்ளானவர்களுக்கும் இந்த ஆய்வுகூடத்தில் விருத்தி செய்யப்பட்ட பிறப்புறுப்புகள் வரப்பிரசாதமாக அமையும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு கூடத்தில் விருத்தி செய்யப்பட்ட பிறப்புறுப்புகளின் பாதுகாப்பு, தொழிற்பாடு, பயன்பாடு என்பன குறித்து மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே விஞ்ஞானிகள் முயல்களுக்கான பிறப்புறுப்பை ஆய்வு கூடத்தில் விருத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான பிறப்புறுப்பை விருத்தி செய்வதற்கு பிறப்புறுப்பு பொருத்தப்படவுள்ள நபரின் உடலிலிருந்து கலங்கள் பெறப்பட்டு 6 வாரங்கள் ஆய்வு கூடத்தில் வளர்ச்சி செய்யப்படும்.
இந்நிலையில் இந்த பிறப்புறுப்புக்கான கட்டமைப்பிற்காக தானமாக பெறப்பட்ட பிறப்புறுப்பு அதனை வழங்கியவரின் கலங்கள் அகற்றப்பட்டு பயன்படுத்தப்படும். அதன் பின் அந்த பிறப்புறுப்பு கட்டமைப்பில் பிறப்புறுப்பு பொருத்தப்பட வேண்டியவரின் கலங்கள் சேர்க்கப்படும்.