Paristamil Navigation Paristamil advert login

மின்னுவதெல்லாம் பொன்னல்ல..

மின்னுவதெல்லாம் பொன்னல்ல..

10 புரட்டாசி 2023 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 2772


ஒரு சின்ன கிராமம், அங்கு ஒரு ஏழை பாகன் வசித்து வந்தான். அவன் அங்கு வாழும் மிராசுதாரர்களுக்கு அருகில் இருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து கொடுத்து அதற்கான வருமானத்தை ஈட்டி வந்தான். அந்த வருமானம் அவனது அன்றாட வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்தது. அவன் தண்ணீர் கொண்டு செல்ல இரண்டு மண் பானைகளை வைத்திருந்தான்.


இந்த மண் பானைகளில் ஒன்று புதியது. இன்னொன்று பழையது, பழைய பானையில் சில விரிசல்கள் இருந்தன. இருந்தாலும் பாகன் அதை வைத்து கொண்டுதான் தினமும் செல்வந்தர்கள் வீட்டிற்கு சென்று நீரை கொடுத்து வந்தான். புது மண்பானை கொஞ்சம் அழகாக மின்னியது. பழைய பானையோ சோகமாக இருந்தது.

இதை பார்த்த பாகன் என்னவாயிற்று என பழைய பானையை கேட்டான். பானை சொன்னது புது பானை என்னை ரொம்ப இகழ்ச்சியாக பேசுகிறது. பாகன் கேட்டான் அப்படி என்ன கூறியது. புது பானை சொல்லியது ஆமா நான் தான் அவனை கிண்டல் செய்தேன், அவன் விரிசல் விட்டு உடையும் நிலையில் இருக்கிறான். என்னை பாருங்கள் நான் புது பொலிவுடன் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறேன் என்றது. இதை கேட்டதும் பாகன் வாய் விட்டு சிரித்தான். 

விரிசல் விழுந்த பானையையும், புது பானையையும் தூக்கி கொண்டு கிணற்றின் அருகில் சென்றான். இரு பானைகளிலும் நீரை நிரப்பி விட்டு கிளம்பி சென்றான். போகும் வழியில் விரிசல் விழுந்த பானையிடம் உன் பக்கம் இருக்கும் வழி பாதையை கவனித்து கொண்டே வா என்றான்.

பானையும் அப்படியே பார்த்தது. அந்த வழிப்பாதை ஓரம் மிகவும் செழிப்பாக பச்சை பசேல் என இருந்தது. சில செடிகளில் பூக்களும் அழகாய் பூத்து கிடந்தன. இதை பார்த்த பானைக்கு ஒரு மகிழ்ச்சி நாம் போகும் வழி இத்தனை அழகாக இருக்கிறதே என்றது. பாகன் நீரை செல்வந்தன் வீட்டில் கொடுத்துவிட்டு அதே பாதையில் திரும்பி வருகிறான். ஆனால் இப்பொது அந்த பசுமை இல்லை.

பழைய பானைக்கு குழப்பமாக இருந்தது. பாகனிடம் கேட்டது, ஏன் இந்த பக்கம் பசுமையாக இல்லை நாம் வேறு வழியில் வந்து விட்டோமா? என்றது. பாகன் புன்னகைத்தவாறே, அதே வழிதான். ஆனால் இந்த முறை நீ வேறுபக்கம் இருக்கிறாய். நாம் போகும்போது நீ பார்த்த பசுமைக்கு காரணம் நீதான். 

உன் விரிசல்கள் மூலமாக வெளியேறும் நீரினால் தான் அந்த செடிகள் பூத்துள்ளன. இந்த பக்கம் புது பானை என்பதால், நீர் விழவில்லை செடிகளும் முளைக்கவில்லை. இந்த வழியாக செல்பவர்கள் இந்த பசுமையான பாதையை பார்த்து மகிழ்வதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். 

அதனால் தான் நான் உன்னை மாற்றாமல் உபயோகித்து வருகிறேன் என்றான். பழைய பானைக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி, புது பானை வாயே திறக்கவில்லை. இனிமேல் யாரையும் தேவையில்லாமல் சீண்ட கூடாது என்று முடிவு செய்தது. ஆகவே குழந்தைகளா உங்களை யாரேனும் உன்னால் உபயோகம் இல்லை என்று கூறினால் துவண்டு போகாமல், உங்களால் ஏதோ ஒரு செயல் இந்த உலகத்துக்கு தேவை பட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்