பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
10 புரட்டாசி 2023 ஞாயிறு 16:07 | பார்வைகள் : 5047
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன், பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இந்தியா தலைமையிலான இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், வங்காளதேசம் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நேற்றைய முதல் நாள் உச்சிமாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
நேற்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. கூட்டுப்பிரகடனத்தை ஜி20 கூட்டமைப்பின் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இன்று ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டம் நடைபெற்றது. தற்போது இந்த ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது.
இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இன்று மதிய உணவின் போது பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் மிகவும் பயனுள்ள மதிய உணவு சந்திப்பு. நாங்கள் பல தலைப்புகளில் விவாதித்தோம். இந்தியா-பிரான்ஸ் உறவு, முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அளவிடுவதை உறுதிசெய்ய எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்து உள்ளார்.