Paristamil Navigation Paristamil advert login

சோயா சப்பாத்தி

சோயா சப்பாத்தி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9403


 காலையில் எழுந்ததும் குழந்தைகளுக்கு மதிய வேளையில் சாப்பிட என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்பவர்களா? நல்ல ஆரோக்கியமான உணவை குழந்தைக்கு செய்து கொடுக்க ஆசையா? அப்படியானால் சோயாவால் ஆன மீல் மேக்கர் மற்றும் காய்கறிகளைக் கொண்டு எளிமையான முறையில் சப்பாத்தி செய்து கொடுங்கள். இதனால் குழந்தைகளுக்கு வேண்டிய புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் நாள் முழுவதும் குழந்தைகள் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு ஏற்ற சக்தியையும் கொடுக்கும். இப்போது அந்த சோயா சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
முட்டைகோஸ் - 1/2 கப் (துருவியது மற்றும் வேக வைத்தது) 
பாசிப்பருப்பு - 1/4 கப் (வேக வைத்தது) 
மீல் மேக்கர் - 1/2 கப் (பொடி செய்தது) 
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது) \
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
கோதுமை மாவு - 2 கப் 
தண்ணீர் - 1 கப் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வேக வைத்துள்ள முட்டைகோஸ், பாசிப்பருப்பு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். 
 
பின் மீல் மேக்கர் பொடி, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து பச்சை மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும். 
 
பின்பு ஒரு பௌலில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை உருண்டைகளாக்கி, ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போன்று சிறு வட்டத்தில் தேய்த்து, அவற்றின் நடுவே முட்டைகோஸ் கலவையை சிறிது வைத்து மூடி, மீண்டும் அதனை சப்பாத்தி போன்று கவனமாக கலவை வெளியே வராதவாறு தேய்த்துக் கொள்ள வேண்டும். 
 
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளைப் போட்டு, அதன்மேல் எண்ணெய் தடவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சோயா சப்பாத்தி ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்