Paristamil Navigation Paristamil advert login

நாட்டின் பன்முக கலாசாரத்தை நாசப்படுத்த சதி; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

நாட்டின் பன்முக கலாசாரத்தை நாசப்படுத்த சதி; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

11 புரட்டாசி 2023 திங்கள் 05:37 | பார்வைகள் : 4224


நாட்டின் பன்முக கலாசாரத்தை நாசப்படுத்த சதி நடப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.


பொருளாதாரம் நாசமாகும் 

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சையத் நசீர் உசேனுக்கு பாராட்டு விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு பேசியதாவது:-

நாட்டின் பன்முகத்தன்மை நாசம் என்றால் அது அரசியல் சாசனம் நாசம் என்பதற்கு சமம் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் பன்முக கலாசாரத்தை நாசப்படுத்த சதி நடக்கிறது. இதற்காக மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை கூறுகிறார்கள். இதை நம்பினால் நமது நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரம் நாசமாகும்.

பன்முக கலாசாரம் 

நாட்டின் பெயரையே மாற்றும் சதியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பா.ஜனதாவினர் நாடகமாடுகிறார்கள். இந்தியா கூட்டணியை கண்டு நடுங்கும் பா.ஜனதா இப்போது பாரத் என்று அழைக்க தொடங்கியுள்ளனர். நாம் பாரத் ஜோடோ பாதயாத்திரையை நடத்தியவர்கள். நமக்கு பாரதம் குறித்து பாடம் எடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

இவர்களுக்கு பாரதம் மீது மதிப்பு இல்லை. இந்தியாவின் கண்ணியம் என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை. நமது நாட்டின் பன்முக கலாசாரம் காங்கிரசின் கையில் பாதுகாப்பாக உள்ளது. 

யார் என்ன முயற்சி செய்தாலும், நாட்டின் பன்முக கலாசாரம், மதசார்பற்ற கொள்கை, நல்லிணக்க மரபை காங்கிரஸ் காக்கும். மதசார்பற்ற கொள்கை, நல்லிணக்கத்தை காப்பாற்றினால் தான் நாடு வளர்ச்சி அடைய முடியும். இவ்வாறு சித்தராமையா பேசினார். 

இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்