இலங்கையின் பல அரச அலுவலகங்கள் மீது சைபர் தாக்குதல்
11 புரட்டாசி 2023 திங்கள் 02:48 | பார்வைகள் : 4675
இலங்கையின் பல அரசு அலுவலகங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இணைய தாக்குதலால் தொடர்புடைய பல அரச நிறுவனங்களின் அத்தியாவசிய தரவுகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளை குறிவைத்து இந்த இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இணைய தாக்குதல்கள் இந்த ஆண்டு மே 17 முதல் ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை நடந்ததாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அலுவலகம் உட்பட 300 அரச அலுவலகங்களின் சுமார் 5,000 மின்னஞ்சல் முகவரிகளின் தகவல்கள் தொலைந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி அலுவலகம், அமைச்சரவை அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் கீழ் உள்ள சில தரவுகள் மட்டுமே இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) இழந்த தரவுகளை மீட்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மீண்டும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாதவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.