4 நாடுகளின் மீட்பு உதவிகளை ஏற்றுக் கொண்ட மொராக்கோ
11 புரட்டாசி 2023 திங்கள் 09:39 | பார்வைகள் : 6151
மொராக்கோ நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 2100 பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு நாடுகளின் மீட்பு உதவிகளை மொராக்கோ ஏற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், அதில் 1404 பேர் வரை மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தூங்கி கொண்டு இருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிட இடிபாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பொதுமக்களை பாதுகாப்பாக மீட்க அந்த நாட்டு ராணுவம் மற்றும் அவசர கால மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்பெயின், பிரித்தானியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 வெளிநாட்டு மீட்பு உதவிகளை மொராக்கோ தற்போது ஏற்றுக் கொண்டு இருப்பதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முன்வந்த வெளிநாட்டு தேடல் மற்றும் மீட்பு குழுக்களின் அழைப்புகளுக்கு மொராக்கோ நாட்டு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்து பதிலளித்துள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நாடுகளை போன்றே இன்னும் பல நாடுகள் உதவிகள் வழங்க முன்வந்து உள்ளன.
ஆனால் அவர்களை ஒருங்கிணைப்பதில் பற்றாக்குறைகள் இருப்பதால் அவை மீட்பு பணியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதால் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.
ஆனால் வருங்காலத்தில் தேவைகள் ஏற்பட்டால், மற்ற நாடுகளின் சலுகைகளும் ஏற்றுக் கொள்ளப்படும் என மொராக்கோ உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொராக்கோ நாட்டுக்கு தேவையான மீட்பு உதவிகளை வழங்க பிரான்ஸ் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.