நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய கிறிஸ்டியானோ ரொனால்டோ
11 புரட்டாசி 2023 திங்கள் 09:53 | பார்வைகள் : 4699
மொராக்கோவை உலுக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்திற்குப் பிறகு அடைக்கலம் தேடும் மக்களுக்காக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஹொட்டலை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு, உல்ளூர் நேரப்படி சுமார் 11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.8 என பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மொராக்கோவை மொத்தமாக புரட்டிப்போட்டது. இதில் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள பல கிராமங்கள் மொத்தமாக சின்னாபின்னமானது.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், இறப்பு எண்ணிக்கை 2,100 கடந்துள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களுடன் தப்பியுள்ளதுடன், இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர், பலர் தெருக்களில் இரவைக் கழித்தனர்.
வெளிவரும் தகவலின்படி மக்கள் தங்குமிடம் தேடி வருவதுடன், பலர் ஹொட்டல்களை நாடியுள்ளனர்.
இந்த நிலையில் மொராக்கோவின் Marrakech பகுதியில் அமைந்துள்ள Pestana CR7 என்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹொட்டலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிப்புற குளம், உடற்பயிற்சி மையம், உணவகம் மற்றும் மொட்டை மாடியுடன் நான்கு நட்சத்திர தரவரிசையைக் கொண்ட ஹொட்டல் இது.
ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு தங்க அறைகளை வழங்குவதுடன் பின்பற்றப்பட்டுவரும் நுழைவு விதிமுறைகளை ஒதுக்கி, தங்குவதற்கு இடம் தேவைப்படும் எவருக்கும் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.