12 நாள் சுற்றுப்பயணம்: ஸ்பெயின் புறப்பட்டார் மம்தா பானர்ஜி
13 புரட்டாசி 2023 புதன் 08:07 | பார்வைகள் : 5125
மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநில தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் மற்றும் துபாய் நாடுகளில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக நேற்று அவர் ஸ்பெயின் புறப்பட்டு சென்றார். முதலில் துபாய் சென்று, பின்னர் அங்கிருந்து இணைப்பு விமானம் மூலம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் செல்ல மம்தா திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நேற்று காலை கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் தலைமைச் செயலாளர் எச்.கே.திவேதி உள்பட மூத்த அரசு அதிகாரிகள் பலர் சென்றுள்ளனர்.
3 மணி நேரம் தாமதம்
இணைப்பு விமானங்கள் கிடைக்காததால் நேற்று இரவு துபாயில் தங்கிய மம்தா, இன்று (புதன்கிழமை) ஸ்பெயினுக்கு புறப்பட திட்டமிட்டிருக்கிறார்.
முன்னதாக மம்தாவின் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து துபாய்க்கு புறப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த பயணம் 3 மணி நேரம் தாமதமானது.
பயணம் தாமதமானதால் மம்தா, விமான நிலையத்தில் உள்ள விற்பனை நிலையங்களை பார்வையிட்டார். அதை தொடர்ந்து, துபாய் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 ஆண்டுகளில் முதல் முறை
நாங்கள் வெளிநாடு சென்று 5 ஆண்டுகள் ஆகிறது. ஏனெனில் மத்திய அரசு தேவையான அனுமதியை முன்னதாக வழங்கவில்லை. இந்த ஆண்டு சர்வதேச கொல்கத்தா புத்தகக் கண்காட்சியின் கருப்பொருள் நாடாக ஸ்பெயின் இருந்தது.
அவர்கள் உற்பத்தி மற்றும் பிற தொழில்களில் சிறந்தவர்கள். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 3 நாட்கள் தங்கியிருந்து வணிக மாநாட்டில் பங்கேற்க உள்ளோம். மேலும் அங்கு வசித்து வரும் மேற்குவங்காள மக்களை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறோம்.
மீண்டும் துபாய்க்கு... அதன்பின்னர் ரெயிலில் பார்சிலோனா நகருக்கு சென்று, அங்கு நடைபெறும் வணிக உச்சி மாநாட்டிற்கான 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறோம்.
பின்னர் நாங்கள் மீண்டும் துபாய்க்கு திரும்பி அங்கு நடைபெறும் வணிக மாநாட்டில் கலந்துகொள்வோம். மேற்குவங்காளம் திரும்பவதற்கு முன்பு சில நாட்கள் துபாயில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.