யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் ஸ்மார்ட் கைப்பேசி பாவனைக்கு கட்டுப்பாடு
14 புரட்டாசி 2023 வியாழன் 02:51 | பார்வைகள் : 4323
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் கைப்பேசி பாவனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
வைத்தியசாலைக்குள் அத்தியாவசிய தேவையின்றி, ஸ்மார்ட் கைப்பேசியை பயன்படுத்த படம் மற்றும் காணொளி பதிவு செய்வதற்கும் சமுக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நோயாளர்களின் நலன் கருதி, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், நோயாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.
அண்மையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு தவறான முறையில் 'கெணுலா' பொருத்தப்பட்டமையால் குறித்த சிறுமியின் இடது கை மணிக்கட்டுக்கு கீழ் பகுதி அகற்றப்பட்டுள்ளது.
அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாதியர்களின் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டதாக பல தரப்பினராலும், குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் கைப்பேசி பாவனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.