Paristamil Navigation Paristamil advert login

விநாயகருக்கு பிடித்தமான மோதகம்

விநாயகருக்கு பிடித்தமான மோதகம்

14 புரட்டாசி 2023 வியாழன் 09:21 | பார்வைகள் : 3639


விநாயகர் சதுர்த்தி என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது மோதகம்  தான். வெளியே தூய வெள்ளை நிறத்தில் லேசான உவர்ப்புச் சுவையுடன், உள்ளே பொன்னிறத்தில் நாவை ஊற வைக்கும் பூரணத்தை வைத்து செய்யப்படும் மோதகத்திலும் ஒரு தத்துவம் இருக்கிறது. 

அதாவது மோதகத்தின் மேலே இருக்கும் மாவுப் பொருள் தான் அண்டம். இனிப்பான பூரணம் தான் பிரம்மம். உலக வாழ்க்கை பற்றற்று கடந்து சென்றால் இனிப்பான கடவுளை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்குவதற்காக இந்த மோதகம் விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்படுகிறது. 

தேவையான பொருட்கள்:

 பச்சரிசி – 200 கிராம், 
புழுங்கல் அரிசி – 200 கிராம், 
வெல்லம் – 100 கிராம், 
ஏலக்காய் – 3, 
தேங்காய் – ½ மூடி, 
உப்பு – ¼ டீஸ்பூன். 

செய்முறை: 

முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து மிக்சியில் நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். 

பின் அடிகனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும். மாவானது ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். 

பின்னர் வறுத்த மாவினை சல்லடையில் போட்டு சலிக்கவும். இப்போது கொழுக்கட்டை தயாரிக்க மாவு தயார்.  

பின்னர் தேங்காயை துருவி, வெல்லத்தை பொடியாக தட்டிக் கொள்ளவும். பாசிப்பயிற்றை வேகவைத்து ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவல், வெல்லம், மசித்த பாசிப்பயிறு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒருசேர கலக்கவும். இப்போது பூரணக் கலவை தயார். 
இப்போது  மோதக  மாவில் உப்பினைக் கலந்து சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி, மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்ட வேண்டும். 

அதில் இருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்யவும். அதில் சிறிதளவு பூரணக் கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும்.   மோதகங்களை திரட்டும்போது பூரணக் கலவை வெளியே வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். 

இவ்வாறாக எல்லா மாவினையும் மோதகங்களாக தயார் செய்யவும். பின்னர் குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானவுடன் அதில் மோதகங்களை போட்டு ஆவி வர நன்கு வேக வைக்க வேண்டும். சுவையான விநாயகர் சதுர்த்தி மோதகம்  தயார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்