Paristamil Navigation Paristamil advert login

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 ஆக உயர்வு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 ஆக உயர்வு

14 புரட்டாசி 2023 வியாழன் 17:31 | பார்வைகள் : 4307


கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு 5 ஆக உயர்ந்தது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 789 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் காய்ச்சல் பாதித்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அடுத்தடுத்து இறந்தனர். அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.

அதில் அவர்கள் இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. மேலும் முதலில் பலியான நபரின் குடும்பத்தினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவரின் உறவினர்களிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து, அவர்களது தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை மாநில சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். குடும்பத்தினர், உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்தபோது சிகிச்சை அளித்தவர்கள் என 168 பேர் கண்டறியப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர மற்ற கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நிபா தொற்று பாதித்து இறந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களாக பட்டியலிடப்பட்டவர்களில் சிலரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் சுகாதார பணியாளர் ஒருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. 

ஏற்கனவே 4 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதார பணியாளரும் பாதிக்கப்பட்டு உள்ளதால் கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக உயர்ந்தது. 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 

தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 789 ஆக அதிகரித்துள்ளது. 

அவர்களில் 157 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு யாருக்கும் இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்