முளைக்கட்டிய பயிர் சாண்ட்விச்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10174
காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுடன் நாளை துவங்கினால், அந்த நாள் மிகவும் இனிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அதிலும் முளைக்கட்டிய பயிரை காலையில் சாப்பிட்டால், அதில் உள்ள புரோட்டீன் மற்றும் குறைவாக கொழுப்பால், உடல் நன்கு பிட்டாக இருக்கும். சிலருக்கு முளைக்கட்டிய பயிரை பச்சையாக சாப்பிட பிடிக்காது. ஆகவே அத்தகையவர்களுக்காக அதனைக் கொண்டு ஒரு அருமையான சாண்ட்விச் ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இது காலையில் செய்வதற்கு மிகவும் ஈஸியானது மற்றும் விரும்பி சாப்பிடக்கூடியது. சரி, இப்போது அந்த முளைக்கட்டிய பயிர் சாண்ட்விச்சை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை பிரட் - 6 துண்டுகள்
வெங்காயம் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
குறைந்த கொழுப்புள்ள வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
முளைக்கட்டிய பயிர் கலவைக்கு...
விருப்பமான முளைக்கட்டிய பயிர்கள் - 1 கப் (வேக வைத்தது)
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகப் பொடி - 1 டீஸ்ழுன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின் பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கலவை நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும். இறுதியில் முளைக்கட்டிய பயிர்கள் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறி இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த கலவையை மூன்றாக பிரித்து, அதில் ஒரு பகுதியை எடுத்து ஒரு பிரட் துண்டின் மீது வைத்து, சிறிது வெங்காயத்தை தூவி, அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும். பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் சாண்ட்விச்சுகளை வைத்து, அதன் இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவி, 3-4 நிமிடம் முன்னும் பின்னும் பொன்னிறமானதும் எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான முளைக்கட்டிய பயிர் சாண்ட்விச் ரெடி!!!