Paristamil Navigation Paristamil advert login

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடந்த முழுஅடைப்பு : தெலுங்கு தேசம் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடந்த முழுஅடைப்பு : தெலுங்கு தேசம் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது

12 புரட்டாசி 2023 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 2646


சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திராவில் நடந்த முழுஅடைப்பு அமைதியாக முடிந்தது. பஸ்கள் ஓடின. அலுவலகங்கள் இயங்கின.

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை, சுமார் ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா கோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, அவரை கிழக்கு கோதாவரி மாவட்ட தலைநகர் ராஜமுந்திரியில் (ராஜமகேந்திரவரம்) உள்ள மத்திய சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக விஜயவாடாவில் இருந்து 200 கி.மீ. தூரம் சாலைமார்க்கமாக சந்திரபாபு நாயுடுவை அழைத்துச் சென்றனர்.

சிறையில் அடைப்பு

நேற்று அதிகாலை 1.20 மணிக்கு போலீஸ் வேன், ராஜமுந்திரி சிறையை அடைந்தது. சிறைவாயில் வரை சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளருமான நர லோகேஷ், காரில் பின்தொடர்ந்தார்.

சிறிது நேரம் காத்திருந்து விட்டு அவர் திரும்பினார். சந்திரபாபு நாயுடுவை அதிகாரிகள் சிறைக்குள் அழைத்துச் சென்றனர். அவரது உயிருக்கான அச்சுறுத்தலை கருதி, தனியாக உள்ள 'சினேகா' என்ற பிளாக்கில் அவரை அடைத்தனர்.

அவருக்கு '7691' என்ற கைதி எண் ஒதுக்கப்பட்டது. அவருக்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு தனி உதவியாளரும், 5 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

300 போலீசார் பாதுகாப்பு

வீட்டு உணவும், மருந்துகளும் அளிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. எனவே, நேற்று காலை, சந்திரபாபு நாயுடுவை அவருடைய மனைவி புவனேஸ்வரி, மகன் நர லோகேஷ், மருமகள் பிராமினி ஆகியோர் சந்தித்தனர்.

பால் கலக்காத காபி, பழ சாலட், வெந்நீர் ஆகியவற்றை அளித்தனர். சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டதால், ராஜமுந்திரி சிறையை சுற்றிலும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க 300 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ராஜமுந்திரி நகரில் போலீஸ் சட்டத்தின் 30-வது பிரிவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


முழுஅடைப்பு

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி நேற்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனாவும், கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ஆனால், பா.ஜனதா ஆதரவு தெரிவிக்கவில்லை. முழுஅடைப்பை முறியடிப்பதற்காக, தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

கட்சியின் மாநில தலைவர் கே.அச்சாநாயுடு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சில மூத்த தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

பஸ்கள் ஓடின

 பல இடங்களில் தெலுங்கு தேசம் தொண்டர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். நரசன்னபேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை எரித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். ஆந்திரபிரதேச அரசு போக்குவரத்து கழக பஸ்கள், முதலில் இயக்கப்படவில்லை பின்னர், வழக்கம்போல் இயக்கப்பட்டன.

தனியார் வாகனங்களும் வழக்கம்போல் ஓடின. அரசு அலுவலகங்கள், அரசு கல்லூரிகள், அரசு பள்ளிகள் எப்போதும் போல் செயல்பட்டன. ஆந்திர பல்கலைக்கழகமும், அதனுடன் இணைந்த கல்லூரிகளும் இயங்கின.

சில தனியார் பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவித்து இருந்தன. பொதுத்துறை வங்கிகள், வழக்கம்போல் இயங்கின.

அசம்பாவிதம் இல்லை

ஆந்திராவின் பெரிய நகரான விசாகப்பட்டினத்தில் முழுஅடைப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

முழுஅடைப்பு அமைதியாக நடந்து முடிந்தது. இதுபற்றி கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கா பிரதா பாக்சி கூறியதாவது:-

நிலைமை அமைதியாக இருந்தது. எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. சூழ்நிலைக்கேற்ப உள்ளூர் அதிகாரிகள் தடை உத்தரவு பிறப்பித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்