கொழும்பை அச்சுறுத்தும் கும்பல் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
12 புரட்டாசி 2023 செவ்வாய் 02:31 | பார்வைகள் : 5269
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பேருந்து பயணிகளிடம் பணம், சொத்துக்களை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த கும்பல் திட்டமிட்ட முறையில் முச்சக்கர வண்டி மற்றும் பொது போக்குவரத்து சேவைகளில் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பலின் பல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் கொழும்பு, களனி, நீர்கொழும்பு, நுகேகொட, கல்கிஸ்ஸ மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
தம்பதிகள் அல்லது தனி நபர்களாக நெடுஞ்சாலையில் காத்திருந்து வாடகை முச்சக்கரவண்டியில் ஏறி போதை அல்லது மயக்கம் ஏற்படுத்தும் மாத்திரை ஒன்றை கொடுத்து உரிமையாளர்களின் பணம், கைத்தொலைபேசிகள் மற்றும் சிலரது முச்சக்கரவண்டிகளை கொள்ளையடித்துச் செல்வதாக மேல் மாகாண உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைதூர சேவை பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தூங்கும் போது கையடக்கத் தொலைபேசிகள், பணம் மற்றும் பொருட்கள் திருடப்படுவது தொடர்பாக பொலிஸ் நிலையங்களுக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமையாற்றும் நபர் ஒருவரும் நேற்று முக் கஹதுடுவ பிரதேசத்தில் இதேபோன்றதொரு சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
அவர் தனது பணி முடிந்து முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டிருந்த போது, காலி முகத்திடலுக்கு அருகில் களுபோவில செல்லவிருப்பதாக கூறி முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளார்.
களுபோவில வைத்தியசாலை
இவ்வாறு பயணித்த நபர் களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தில் கத்தியை வைத்து சாரதியின் பணப்பையில் இருந்த சுமார் இரண்டாயிரம் ரூபாவுடன் முச்சக்கரவண்டியை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இது தொடர்பில் கஹதுடுவ பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்டு மக்களை மயக்கமடையச் செய்யும் இவ்வாறான திருட்டுக்களை தடுக்க சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், கடந்த வாரம், கொட்டாஞ்சேனை மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களில் இரண்டு வயோதிபர்களுக்கு திரவத்தை குடிக்கக் கொடுத்து அவர்களது பணம் கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
திரவத்தை அருந்திய இரு வயோதிபர்களில் ஒருவர் இன்னும் சுயநினைவின்றி இருப்பதாகவும் மற்றையவர் சுயநினைவு பெற இரண்டு நாட்கள் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.