கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு - 05 பேரின் உடற்பாகங்கள் மீட்பு
12 புரட்டாசி 2023 செவ்வாய் 05:18 | பார்வைகள் : 4991
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதுவரை ஐந்து பேரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் சடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக இருந்தமையினால், சடலங்களை எண்ணிக்கை மற்றும் அதனை அடையாளப்படுத்துவதில் சிரமம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அகழ்வு பணிகளை ஆறாம் நாளாக இன்றைய தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத தமிழ் மக்களுக்கு கொக்குதொடுவாய், மனித புதைகுழி அகழ்வு பணி மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடம்பெறும் இடத்தை நேற்று பார்வையிட்டதன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.