Paristamil Navigation Paristamil advert login

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் - அமெரிக்கா எடுத்துள்ள விசேட தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் - அமெரிக்கா எடுத்துள்ள விசேட தீர்மானம்

16 புரட்டாசி 2023 சனி 05:45 | பார்வைகள் : 4273


உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் இதனை  தெரிவித்துள்ளார்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனிவா சென்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார். 

அதன்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை வொஷிங்டனில் தங்கியிருந்த அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக், அமெரிக்கத் திறைசேரி அதிகாரிகள், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தியுள்ளார்.

 குறிப்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது, அண்மையில் சனல்-4 செய்திச்சேவையினால் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

 அந்த ஆவணப்படத்தின் பின்னணி மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத்தன்மை, உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டிருப்பதனால் இதனை சர்வதேச குற்றமாகக் கருதி சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

 சனல்-4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ள ஹன்ஸீர் அஸாத் மௌலானா, இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்கனவே சாட்சியமளித்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 இதுபற்றிக் கருத்துவெளியிட்ட பெத் வான் ஸ்காக், உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் உண்டு எனவும், இதுகுறித்து தாம் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்