முடக்க நிலைகளில் சிறுவர்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்த பொறிமுறை அவசியம் !
17 புரட்டாசி 2023 ஞாயிறு 08:32 | பார்வைகள் : 2911
“கொவிட் முடக்க நிலையில் வேலைக்கு போக முடியாத நிலை, கணவன், பிள்ளைகள் என அனைவரும் ஒரு சிறிய வீட்டில் வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்” என்கிறார் கொழும்பு -6 இல் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயான மேகலா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
தனது வயதுசென்ற தந்தை மற்றும் தாயுடன் ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார் மேகலா. இவர் கொவிட் காலத்தில் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகி இருந்ததாக கூறுகிறார்.
“ நாங்கள் ஒரு கூட்டுக்குடும்பம் எனக்கு ஒரு மகன் இருக்கின்றார். அவர் சரியான துடியாட்டம் தற்போது அவருக்கு வயது 7. கொவிட் முடக்க நிலையில் நாம் வீட்டில் இருந்தாலும் அப்போது மகனுக்கு 4 வயது. ஆனாலும் மகனிடம் இருந்து விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது நாம் வீட்டில் இருந்து வேலை செய்தமையால் இந்த நிலை. இதனால் பிள்ளைகள் குறித்த அக்கறையின்மை அதிகரித்து இருந்தது” என்கிறார் மேகலா.
வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்ய நேரிட்ட கொவிட் முடக்க நாட்களில் ஊழியர்கள் வேலை செய்யும் நேரம் அதிகமானது. அலுவலகத்தில் பலரை வேலையிலிருந்து இடைநிறுத்தியதால் இருக்கின்ற சொற்ப ஊழியர்களுக்கு அதிகப்படியான வேலைகள் வந்து குவிந்ததால், ஒருவர் இரண்டு மூன்று பேரின் வேலைகளை மொத்தமாக செய்யவேண்டிய கட்டாய நிலை உருவானது. இதனால் பிள்ளைகளிடத்தில் இருந்து பெற்றோர்கள் தூரமாக்கப்பட்டனர்.
“ வீட்டில் வேலை செய்வதற்கு எமக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அப்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டோம். சத்தம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால் கதவைப் பூட்டிவிட்டு தான் வேலை செய்ய வேண்டும். அப்போதும் மகன் இடையூறு கொடுத்துக் கொண்டு தான் இருந்தார். இதனால் மகனை நான் சற்று தூரத்தில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றார் மேகலா.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு ஆகியவற்றில் தகவல் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கோரப்பட்ட தகவல்களுக்கு அமைய கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட் முடக்க நிலையில் 466 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இது 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1535 ஆக அதிகரித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
“ சிறுவர்கள் புத்திசாலியானவர்களும் எந்த சூழ்நிலையையும் தங்களுக்குரியதாக மாற்றிக்கொள்ளக்கூடியவர்களும் ஆவர். அதனால் அவர்கள் அன்பு மற்றும் நம்பிக்கை வைத்தவர்களால் ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்திற்குள்ளாகி கொலையும் செய்யப்படுகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான அக்கறை மற்றும் நேரடி தொடர்புகள் இல்லாமையே. பிள்ளைகள் மற்றும் சிறுவர்களுடன் நாம் நேரடி தொடர்புகளையும் அக்கறையையும் அடிக்கடி பேண வேண்டும்.” என்கிறார் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆர்வத்துடன் பரப்புரை செய்பவரும் இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை தடை செய்யும் அமைப்பை நடத்துபவருமான கலாநிதி துஷ் விக்கிரமநாயக்க .
“ கொவிட் காலத்தில் வீட்டில் இருக்கும் நிலை எனக்கு ஏற்பட்டது. அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருந்ததால் புதிய பிரச்சினைகள் தோன்றின. மின்விசிறியை போட்டால் பிரச்சினை, தொலைக்காட்சியை போட்டால் பிரச்சினை என பல புதிய பிரச்சினைகள். அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்டதுபோல இருந்தது. இது எனக்கு கடும் மன அழுத்தத்தை உருவாக்கி இருந்தது. எங்கு சென்று முறைப்படுவது ? யாரிடம் போய் சொல்லுவது என்ற நிலையில் நான் முடங்கி இருந்தேன்” என்கிறார் யாழில் வசிக்கும் 14 வயது மாணவியான ரேகா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது )
“ சிறு சிறு இடங்களில் இருக்கும் போதும் பொருளாதார பிரச்சினைகள் காணப்படும் போதும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் எமது சமூகத்தில் இடம்பெறுகின்றன. அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில், எமது சமூகத்தைப் பொறுத்தவரையில், வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் சாதாரணமாகிவிட்டன. அழுத்தங்கள் அதிகரிக்கும் போது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மேல் தான் அதனை வெளிப்படுத்துவார்கள். அடிப்பார்கள், தள்ளுவார்கள், திட்டுவார்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் எரிச்சலை வெளிப்படுத்துவார்கள்” என்று கூறுகிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் .
“ கணவனும் வீட்டில் இருந்து வேலை, நானும் வீட்டில் இருந்து வேலை என்ற நிலையில் பிள்ளை மேலும் தனிமையை அனுபவிக்க நேர்ந்தது. அத்துடன் அவரை தொலைக்காட்சி பார்க்க விடுவதில்லை, வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கும் நாம் அனுமதிப்பதில்லை ஏனெனில் நாங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் இதனால் மகனும் மன உழைச்சலுக்குள்ளாகி இருந்தார்” என்கிறார் மேகலா.
பலர் வீட்டுக்குள் அடைபட்டு மன அழுத்தம் அதிகரித்திருந்த நிலையில் மன அழுத்தங்கள், கோபதாபங்களை வீட்டில் இருக்கும் பிள்ளைகள் மீதும் மனைவி மீதும் வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் அந்தந்த குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் வன்முறைகள், துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தரவுகளின் படி 2020 ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பில் 2237 முறைப்பாடுகளும் சிறுவர்களுக்கு எதிரான ஏனைய வன்முறைகள் தொடர்பில் 2580 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இதேவேளை, 2021 ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பில் 2741 முறைப்பாடுகளும் சிறுவர்களுக்கு எதிரான ஏனைய வன்முறைகள் தொடர்பில் 3432 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
“ வன்முறை, துஷ்பிரயோகங்களை எவ்வாறு நிறுத்துவதென்பதும் அதுவும் கொவிட் காலங்களில் இருந்த முடக்க நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதென்பதும் இயலாத காரியம். எமது நாட்டில் உள்ள பொறிமுறைகளைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு எந்த வழிகளும் இல்லை. முறைப்பாடுகள் செய்ய வழி இருந்தாலும் பலருக்கு எவ்வாறு முறைப்பாடு செய்வதென்பது கூடத் தெரியாதுள்ளது. முறைப்பாடுகள் செய்தால் கூட முறைப்பாடுகள் சரியாக எடுபடுவதில்லை. கொவிட் முடக்க நிலைகளில் முறைப்பாடுகள் செய்யக்கூடிய இடங்களின் அவசர தொலைபேசி இலக்கங்கள் கூட இயங்காத நிலை காணப்பட்டன. அவ்வாறு இயங்கி முறைப்பாடுகள் கிடைத்தால் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை” எனக் கூறுகிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் .
இவ்வாறான நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தரவுகளின் படி சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் 2019 ஆம் ஆண்டில் 8558 ஆகவும் 2020 ஆம் ஆண்டில் 8165 ஆகவும் 2021 ஆம் ஆண்டில் 11187 ஆகவும் அதிகரித்த போக்கையே காட்டி நின்கின்றது.
இவ்வளவு தொகையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் பதியப்படாத முறைப்பாடுகள் பல இருக்க வாய்புகள் உள்ளன. குறிப்பாக முறைப்பாடளிக்கத் தெரியாமை, குடும்ப கௌரவம், அச்சுறுத்தல், பயம், சமூக மற்றும் ஏனைய காரணங்களால் ஏராளமான சம்பவங்கள் முறைப்பாடு செய்யப்படாமல் வெளிவராதிருக்கலாம்.
“ பிள்ளைகளுக்கு நாம் சிறுவர் துஷ்பிரயோக மற்றும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகள் குறைந்தது 3 நபர்களிலாவது நம்பிக்கை வைத்துப் பழக வேண்டும். ஏனெனில் அப்போது தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படுத்தப்படும் துஷ்பிரயோகங்களை யாராவது ஒருவருக்காவது வெளிப்படுத்துவர்.” என்கிறார் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆர்வத்துடன் பரப்புரை செய்பவரும் இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை தடை செய்யும் அமைப்பை நடத்துபவருமான கலாநிதி துஷ் விக்கிரமநாயக்க. .
கொவிட் முடக்க நிலை காலத்தில் 2021 ஆம் ஆண்டில் 11187 முறைப்பாடுகள் பாதிவாகியுள்ளமையானது சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளமையை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தரவுகளின் படி அவதானிக்க முடிகிறது.
அதிலும்குறிப்பாக 10 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் 2019 ஆம் ஆண்டில் 3634 ஆக பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில் 3416 ஆக பதிவாகியிருந்தது. 2021 ஆம் ஆண்டில் 4352 ஆக பதிவாகியிருந்தது. இதைவிட 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களே வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்னர். 2019 ஆம் ஆண்டில் 6768 ஆகவும் 2020 ஆம் ஆண்டில் 6333 ஆகவும் 2021 ஆம் ஆண்டில் 8579 ஆகவும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
“ பாடசாலைக் கல்வி இணையவழியில் தான் இடம்பெற்றது. நாம் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கும் போது நண்பர்கள் ஆசிரியர்களுடன் நாம் எமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளாக இருக்கட்டும் சந்தோசமாக இருக்கட்டும் பகிர்ந்துகொள்வோம். ஆனால் இவ்வாறான நிலையில் அவற்றை பகிரக்கூட முடியாத நிலை இருந்தது. அனைவரும் ஒரு குழுவாக இருந்து இணையவழியில் கல்வி கற்கும் போது நாம் எமது தகவல்களை பகிர முடியாத நிலை இருந்தது. எமக்கு ஒரு வன்முறையோ அல்லது ஒரு கொடுமையோ நிகழ்ந்தால் கூட ஆறுதலுக்குக்கூட வெளியில் சொல்ல முடியாத நிலை இருந்ததாக” கூறுகிறார் மாணவியான ரேகா.
“ ஒரு வன்முறையோ அல்லது துஷ்பிரயோகமோ இடம்பெற்றால் அருகில் வசிப்போர் முறைப்பாடுகளை மேற்கொள்வார்களா ? இல்லை என நினைக்கின்றேன். ஏனெனில் தங்களுக்கு பிரச்சினை வருமென்றுதெரிந்து முறைப்பாடுகளை மேற்கொள்ளமாட்டார்கள். எத்தனையோ துஷ்பிரயோகச் சம்பவங்கள் சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லும் காலங்களில் தான் வெளிவருகின்றன. பெரும்பாலும் சிறுவர்கள் தங்களது நண்பர்களுக்கு சொல்லி நண்பர்கள் ஆசிரியர்களுக்கு சொல்லும் போது அது வெளிவரும். பாடசாலைகள் இல்லாத காலங்களில் குறிப்பாக முடக்க நிலை நாட்களில் இணையவழி கற்றல் நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன. இதனால் தங்களது நண்பர்களுடன் கதைக்க முடியாதநிலை காணப்படும் அல்லது ஆசிரியருக்கு தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கமுடியாது நிலை இருக்கும். இதனால் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஒவ்வொரு பிள்ளைகளையும் தனித்தனியாக உரையாடுவதற்கு ஏதாவதொரு வழிமுறையை கொண்டுவரவேண்டும். இவ்வாறான முடக்க நிலைகளில் பிள்ளைகளுக்கு தனிப்பட்ட ரீதியில் வாரத்தில் ஒருமுறையாவது இணையவழி மூலம் உளவியல் சார்ந்த வகுப்புக்களை முன்னெடுப்பது சிறப்பானது” என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன்.
“ மற்றுமொரு முடக்கநிலை ஏற்பட்டால் பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள் தொடர்பில் பாதுகாப்பு நடைமுறைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர், சிறுவர்கள் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு ஆகியன முன்னெடுக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்படும் அல்லது வன்முறைக்குள்ளாகும் பெண்கள், சிறுவர்களின் மனநிலையை மேம்படுத்த இணையவழியிலோ அல்லது தொலைபேசி ஊடாகவோ உளவியல் ஆற்றுப்படுத்துகையை முன்னெடுக்ளும் ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுகின்றார் மேகலா.
“ பங்களாதேஷ், கென்யா, ஜப்பான்,தென்னாபிரிக்கா, போன்ற நாடுகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள், மற்றும் வன்முறைகள் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து முன்னோக்கிச்சென்றுள்ள நிலையில், எமது நாடான இலங்கை பின்நோக்கியே சென்றுள்ளதாக” சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆர்வத்துடன் பரப்புரை செய்பவரும் இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை தடை செய்யும் அமைப்பை நடத்துபவருமான கலாநிதி துஷ் விக்கிரமநாயக்க .
“ கொவிட் தொற்றையடுத்து ஏற்பட்ட முடக்கநிலை போன்ற சந்தர்ப்பங்களில் எமது பொறிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் சாதாரண நாட்களில் நாம் பொறிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும். எமது நாட்டில் உள்ள பொறிமுறைகள் அனைத்தும் சரியான பலவீனமான பொறிமுறைகள். இவ்வாறான பொறுப்புவாய்ந்த இடங்களில் கடமையாற்றுபவர்கள் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. எம்மைப் பொறுத்தவரையில் சரியானதொரு பொறிமுறையை அமைத்துக்கொள்வது முக்கியமானது. அத்துடன் அங்கு கடமையாற்றுபவர்களுக்கு சரியான தெளிவு மற்றும் அறிவு இருக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பான விழிப்புணர்வும் தேவை.” என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன்.
“ கையடக்கத்தொலைபேசியை நாம் கல்வி கற்பதற்காக பயன்படுத்த எடுத்தால் கூட அதனை சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்தார்கள். அதனால் படிப்பதற்கும் மனம் பெரிதாக இடம்கொடுக்கவில்லை. நான் கைத்தொலைபேசியை எடுப்பதை கண்டால் அப்பாவுக்கு பிடிக்காது. ஏதாவது சொல்லுவார். அம்மாவும் அப்படித்தான் என்கிறார் ரேகா.
“ இணையவழி வகுப்புக்கள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களிலேயே எத்தனையோ துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக நாம் செய்திகள் வாயிலாக அறிந்துள்ளோம். கைத்தொலைபேசிகளை கற்றலுக்காக பிள்ளைகளுக்கு வழங்கும் போது அவர்களை அறியாமலேயே அவர்கள் தொடர்பான தரவுகள் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை எடுத்து விற்கும் நடவடிக்கைகளே இடம்பெறுகின்றது. இதற்கு என்று ஒரு குழுவே இயங்குகின்றது. இவ்வாறான விடயங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்று ஆராய வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு இவ்வாறான விடயங்கள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என கூறுகிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன்.
சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு பிரச்சினைகளுக்குரிய தீர்வை பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர் ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. எனவே மற்றுமொரு முடக்கநிலை ஏற்படும்போது சிறுவர்களின் பாதுகாப்பில் அக்கறைகொண்டு வரும்முன் காப்போம் என்ற ரீதியில் சிறந்த ஒரு பொறிமுறையை அமைத்து அதனை தற்போதிருந்தே செயற்படுத்த உரிய தரப்பினர் தாமதிக்காது முன்வர வேண்டும்.
நன்றி வீரகேசரி