பாடசாலையில் துன்புறுத்தல் மகளை வீட்டில் வைத்தே படிப்பிக்கும் தந்தை.
19 புரட்டாசி 2023 செவ்வாய் 12:18 | பார்வைகள் : 6977
பாடசாலைகளில் அண்மைக்காலமாக மாணவர்களுக்கிடையில், சில மாணவர்களால் அவர்களின் உடல் பருமன், தோற்றம், அவர்களின் நடவடிக்கைகள் என பல காரணங்களைக் காட்டி துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதும், துன்புறுத்தப்படும் மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.
ஒரு குடும்பத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் இவர்களுடைய மூத்த மகன் பாடசாலை துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சோகத்தில் இருந்து குடும்பம் வெளியே வருமுன், இப்போது இவர்களின் அடுத்த மகள் Jeanne, Collège செல்லும் வயதை எட்டி உள்ளார்.
Jeanneவின் தந்தைக்கு தனது மகளை, மகன் பாடசாலை துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்ட அதே Collègeல் சேர்ப்பதற்கு விரும்பும் இல்லை. எனவே இந்த புதிய கல்வியாண்டு தொடங்கும் முன்பிருந்தே மற்றும் ஒரு பாடசாலையைத் தரும் படி தந்தை ஐந்து தடவைகள் விண்ணப்பித்துள்ளார். அதுவும் மனநலம் மருத்துவரின் பரிந்துரை சான்றிதழ், மருத்துவச் சான்றிதழ் என பல்வேறு பட்ட காரணங்களைக் காட்டியும் குறித்த பாடசாலை நிர்வாகம் தொடர்ச்சியாக தந்தையின் விண்ணப்பத்தை நிராகரித்து வந்துள்ளது. இதனால் தந்தை மகளை வீட்டில் வைத்தே கற்பித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் Poissy (Essonne) நகரில் Nicolas என்னும் மாணவன் பாடசாலை துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், குறித்த தந்தையின் விண்ணப்பத்தை நிராகரித்து வந்த பாடசாலை நிர்வாகம் இப்போது சாதகமான முடிவு ஒன்றை அவருக்கு அறிவித்துள்ளது என தெரியவருகிறது.