Paristamil Navigation Paristamil advert login

இன்றளவும் கொண்ட கொள்கைக்காக நெஞ்சு நிமிர்த்தி நிற்பது தி.மு.க மட்டுமே - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்றளவும் கொண்ட கொள்கைக்காக நெஞ்சு நிமிர்த்தி நிற்பது தி.மு.க மட்டுமே - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

18 புரட்டாசி 2023 திங்கள் 14:07 | பார்வைகள் : 2448


இன்றளவும் கொண்ட கொள்கைக்காக நெஞ்சு நிமிர்த்தி நிற்பது தி.மு.க மட்டுமே என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்தது, தெற்காசியாவின் 20-ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றை எழுதும் எவராலும் தவிர்க்க முடியாத பெருநிகழ்வு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நம் கழகம். சாமானிய இளைஞர் படையின் தளபதியான அண்ணா தலைமையில் கழகம் ஆட்சியைப் பிடித்தது, தெற்காசியாவின் 20-ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றை எழுதும் எவராலும் தவிர்க்க முடியாத பெருநிகழ்வு!

திரும்பிப் பார்த்தால், எத்தனையோ நெருக்கடிகள், போராட்டங்கள், சிறைவாசங்கள், தியாகங்கள், மிரட்டல்கள், பெருவெற்றிகள், படுதோல்விகள்... எனினும் முக்கால் நூற்றாண்டு ஆகியும், கழகத்தின் வலிமை குன்றவில்லை! கழகத்தோடு அக்காலத்தில் தொடங்கப்பட்ட இயக்கங்கள் எல்லாம் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன, கரைந்துபோய் விட்டன.

எதிர்நீச்சல் போட்டு இன்றளவும் கொண்ட கொள்கைக்காக நெஞ்சு நிமிர்த்தி நிற்பது தி.மு.கழகம் மட்டுமே! இந்திய நிலப்பரப்பில், மற்ற அனைத்து மாநிலங்களில் இருந்தும் இன்று தமிழ்நாடு கொண்டிருக்கும் தனித்துவமான பண்பு என்பது தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் முதலிய நம் தலைவர்களின் தொடர் பரப்புரையால்தான் சாத்தியமானது!

முழுக்க முழுக்க ஜனநாயக வழிமுறையால், பகுத்தறிவுச் செயல்பாடுகளால் இதனைச் செய்து காட்டியுள்ளோம் என்பதுதான் உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாமல் நம் திராவிட இயக்கத்துக்கே உரிய பெருமை.

இன்று, மீண்டும் நம் முன் ஒரு வரலாற்றுக் கடமை காத்திருக்கிறது! கழகத்தின் பவளவிழா ஆண்டில், தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, 'இந்தியா' கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாகப் பாடுபட வேண்டும் என்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கழக முப்பெரும்விழா-வில் கேட்டுக் கொண்டேன்! நாற்பதும் நமதே நாடும் நமதே!" இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்