காகித அட்டையினால் தயாரிக்கப்பட்ட பயண அட்டை - முழுவதுமாக நிறுத்தம்
20 புரட்டாசி 2023 புதன் 18:08 | பார்வைகள் : 8907
தொடருந்து நிலையங்களில் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட பயணிச்சிட்டைகள் அடங்கிய புத்தகம் (carnet de tickets என அழைக்கப்படும் 10 பயணச்சிட்டைகள் கொண்ட ஒரு தொகுதி) விற்பனை செய்யப்படுவது முற்றாக நிறுத்தப்பட உள்ளது. இல் து பிரான்சுக்குள் படிப்படியாக நிறுத்தப்பட்டு வந்த இந்த பயண அட்டைகள் நாளை செப்டம்பர் 21 ஆம் திகதியுடன் முழுவதுமாக நிறுத்தப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வகை காகித பயணச்சிட்டைகள் தனித்தனியே வாங்க முடியும் எனவும், ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு 2024 ஆம் ஆண்டு இறுதி வரை இது விற்பனையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காகித பயன்பாட்டினை குறைக்கும் விதமாக முன்னெடுக்கப்படும் என திட்டம், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 280 நிலையங்களில் இந்த காகித பயண அட்டை விற்பனை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் இந்த மொத்த விற்பனை அனைத்து நிலையங்களிலும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.