கனடாவில் இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு பயணிப்பதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் - மத்திய அரசு எச்சரிக்கை
21 புரட்டாசி 2023 வியாழன் 10:36 | பார்வைகள் : 4858
கனடாவில் வசித்து வரும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கனடாவில் காலீஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் இந்த விவகாரத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் என்பவரை கனடா அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியது. கனடா அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டும் இன்றி பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்ைட விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக இந்தியா-கனடா உறவில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.
இந்த நிலையில் கனடாவில் இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
"கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள், அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வெறுப்பு குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
எனவே அந்த நாட்டில் வசித்து வரும் மற்றும் அங்கு பயணம் மேற்கொள்ளும் அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கனடாவில் பாதுகாப்பு சூழல் மோசமடைந்து வருவதால், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதோடு கனடாவில் இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு பயணிப்பதை இந்தியர்கள் அறவே தவிர்க்க வேண்டும்.
கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் கனடா அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.