இந்திய-மியான்மர் எல்லையில் வேலி அமைப்பது குறித்து மணிப்பூர் முதல்-மந்திரி ஆலோசனை
25 புரட்டாசி 2023 திங்கள் 12:05 | பார்வைகள் : 3809
இந்திய-மியான்மர் எல்லையின் இருபுறமும் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல் 16 கி.மீ. தூரத்துக்கு செல்ல அனுமதிக்கும் சுதந்திர நடமாட்ட திட்டம் அமலில் உள்ளது.
மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே 4 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த வன்முறைகளுக்கு பின்னால் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
மணிப்பூர் மியான்மருடன் 398 கிமீ நீள எல்லையை பகிர்ந்து கொள்ளும் நிலையில், வெறும் 6 கி.மீ. தூரம் மட்டுமே வேலி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்தியா-மியான்மர் எல்லையின் இருபுறமும் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல் 16 கி.மீ. தூரத்துக்கு செல்ல அனுமதிக்கும் சுதந்திர நடமாட்ட திட்டம் அமலில் உள்ளது.
இதனால் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்றும் எனவே சுதந்திர நடமாட்ட திட்டத்தை ரத்து செய்து அதிக தூரம் வேலி அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அவர் எல்லை சாலைகள் அமைப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அண்டை நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நமது எல்லைகளை பாதுகாப்பது அவசர தேவையாகிவிட்டது. எனவே இந்திய-மியான்மர் எல்லையில் கூடுதலாக 70 கிமீ எல்லை வேலி அமைக்கும் திட்டம் குறித்து எல்லை சாலைகள் அமைப்பு அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது" என தெரிவித்துள்ளார்.