ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் நேர்காணல் - முழுத்தொகுப்பு
25 புரட்டாசி 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 7632
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்தார். பல்வேறு தரப்பட்ட கேள்விகளை நேர்காணல் மேற்கொண்டவர்கள் முன்வைக்க, அனைத்துக்கும் ஜனாதிபதி பதிலளித்தார். அவருடைய நேர்காணலில் இருந்து..
பாப்பரசர் பிரான்சுக்கு வருகை தந்த போது, அகதிகளை ஐரோப்பா ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் கருத்தை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக ஜனாதிபதிபதியிடம் கருத்து கேட்டறிந்தபோதும், “பிரான்ஸ் தனது பங்கினை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, உலகில் உள்ள அனைத்து அகதிகளையும் பிரான்சே ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்தார். “நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாது. மாறாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகளுக்கு முறையான தங்குமிடம், பொருளாதார உதவிகள் போன்றவற்றில் குறைவைக்காமல் பாதுகாப்பதை உறுதி செய்வோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
பணவீக்கமும், வாழ்வாதார செலவு அதிகரித்துள்ளதை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. “முதலில் நாங்கள் கவனம் செலுத்துவது வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படுவதையும் தான். இவ்வார புதன்கிழமை வரவு செலவுத்திட்டம் வாசிக்கப்பட உள்ளது. (2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம்) பெரும் நிறுவனங்களுடன் நாம் பேச்சுவார்த்தைக்கான ஒரு தளத்தை நாம் உருவாக்கியுள்ளோம்!” என ஜனாதிபதி தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றம்?
தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயமான எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக ஜனாதிபதியின் கருத்து கேட்டறியப்பட்டது. “நாம் எரிபொருள் விற்பனையாளர்களிடம் அவர்களுடைய இலாபத்தில் ஒரு வெளிப்படைத்தன்மையை கோர உள்ளோம். கட்டாயமாக மகிழுந்து பயன்படுத்த தேவை உள்ள ஊழியர்களுக்கு 100 யூரோக்கள் கொடுப்பனவு வருடம் ஒன்றுக்கு வழங்க உள்ளோம்” என அவர் தெரிவித்தார். மேலும், “மின்சாரத்தில் இயங்கும் மகிழுந்துகளுக்கான கொடுப்பனவும், விற்பனை அதிகரிப்புகளை மேற்கொள்ள உள்ளோம். சுற்றுச்சூழல் மாசடைவைக் கருத்தில் கொண்டு 2027 ஆம் ஆண்டில் இந்த இலக்கை நாம் எட்டிவிடுவோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் குறைந்தது ஒரு மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வோம்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
Niger விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியிடம் கேட்டறியப்பட்டது.
பிரான்சின் முன்னாள் காலனித்துவ நாடுகளில் ஒன்றான Niger இல், இராணுவ சதி ஏற்பட்டு, ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அங்கு பிரான்சுக்கு எதிரான பிரச்சாரங்கள் வலுத்து வருகிறது. அங்கிருக்கும் பிரெஞ்சு இராணுவத்தினை வெளியேறும் படியும் கோரப்பட்டு வருகிறது.
“Niger இல் உள்ள தூதரகத்தினை மூடுவதற்கு பிரான்ஸ் முடிவெடுத்துள்ளது. அங்குள்ள பிரெஞ்சு தூதர்களையும், இராணுவத்தினரையும் இவ்வாண்டின் இறுதிக்கும் திருப்பி அழைப்போம்” என ஜனாதிபதி தெரிவித்தார்.