பரிஸ் : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

25 புரட்டாசி 2023 திங்கள் 09:32 | பார்வைகள் : 10764
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சனிக்கிழமை காலை இச்சம்பவம் place de la Porte-de-Vanves (XIVe) பகுதியில் இடம்பெற்றுள்ளது. காலை 7.15 மணி அளவில் அங்கு பலத்த துப்பாக்கி முழக்கம் கேட்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர்.
ஆனால் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றடைந்தபோது அங்கு யாருமே இருக்கவில்லை. சில துப்பாக்கிச்சன்னங்களும், அங்கங்கு இரத்தம் சிந்தியிருப்பதையும் காவல்துறையினர் பார்வையிட்டுள்ளனர்.
30 நிமிடங்களின் பின்னர் அங்குள்ள l'hôpital Saint-Joseph மருத்துவமனையில் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பட்டு காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். மருத்துவமனையில் நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.