ராஜஸ்தானில் பா.ஜனதா மகளிர் அணி புடைசூழ பிரதமர் மோடி, திறந்த வாகனத்தில் ஊர்வலம்
26 புரட்டாசி 2023 செவ்வாய் 06:02 | பார்வைகள் : 3040
ராஜஸ்தானில், பா.ஜனதா மகளிர் அணி புடைசூழ பிரதமர் மோடி திறந்தவாகனத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஊர்வலமாக சென்றார்.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பா.ஜனதா சார்பில் 4 யாத்திரைகள் நடத்தப்பட்டன. அவை நிறைவடைந்ததை குறிக்கும்வகையில், ஜெய்ப்பூர் மாவட்டம் தடியா கிராமத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் பங்கேற்க பிரதமர் மோடி, ஜெய்ப்பூருக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து ஜனசங்க நிறுவனர் தீனதயாள் உபாத்யாயா, குழந்தை பருவத்தில் வாழ்ந்த தாங்க்யா கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார். உபாத்யாயா பிறந்தநாளையொட்டி, தாங்க்யா கிராமத்தில் உபாத்யாயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார்.
பிரதமர் மோடியின் வாகனத்துக்கு பின்னால், பா.ஜனதா மகளிர் அணி பெண்கள் அணிவகுத்து வந்தனர். மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர். பின்னர், பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி ஏறினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக அவருக்கு மகளிர் அணியினர் பிரமாண்ட மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
திறந்த வாகனம் பின்னர், அங்கிருந்து தடியா கிராமத்துக்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றார். அவரை வரவேற்க சாலையின் இருபுறமும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்களை நோக்கி கையசைத்தபடியே அவர் சென்றார்.
பூஜ்ஜியம் மதிப்பெண்
பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- ராஜஸ்தானை ஆளும் அசோக் கெலாட் அரசு, இளைஞர்களின் 5 ஆண்டு காலத்தை வீணடித்து விட்டது.
அந்த அரசுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்தான் கொடுக்க முடியும். அரசு தேர்வு வினாத்தாள் கசிய விட்ட மாபியா கும்பலை காங்கிரஸ் ஆதரித்தது. பா.ஜனதா ஆட்சி அமைத்தவுடன், அக்கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டனர்.
மகளிர் மசோதா பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது காங்கிரசின் நோக்கம் அல்ல. அப்படி இருந்திருந்தால், தங்களது ஆட்சியிலேயே மகளிர் மசோதாவை நிறைவேற்றி இருக்கும்.
பெண்களின் நிர்ப்பந்தத்தால், மகளிர் மசோதாவை ஆதரித்தது. 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள், முன்பு மகளிர் இடஒதுக்கீ்ட்டை எதிர்த்த கட்சிகள்தான் என்று அவர் பேசினார்.