ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புகிறதா.?
26 புரட்டாசி 2023 செவ்வாய் 12:01 | பார்வைகள் : 3195
ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புகிறது என்று வௌியான செய்திகள் குறித்து, பா.ஜ.க. நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஓராண்டுக்கு முன்பு பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி உறவை முறித்துக்கொண்டது.
ஆனால் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், பாரதிய ஜன சங்க தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளையொட்டி நேற்று பாட்னாவில் பா.ஜ.க. ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பங்கேற்று, உபாத்யாயா சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புவதாக கூறப்படுவது குறித்து நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், 'இது என்ன அர்த்தமற்ற பேச்சு? அப்படி எந்த திட்டமும் இல்லை' என்றார்.
'பிரதமர் ஆக ஆசையில்லை' பீகார் சட்டசபை துணை சபாநாயகரும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான மகேஸ்வர் ஹசாரி, இந்தியா கூட்டணியில் பிரதமர் ஆவதற்கு நிதிஷ்குமாரை விட தகுதியானவர் யாரும் இல்லை என்று கூறியிருந்தார்.
அதுகுறித்த கேள்விக்கு, 'இதுபோன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று ஏற்கனவே எனது கட்சி சகாக்களிடம் கூறிவிட்டேன். பிரதமர் ஆக வேண்டும் என்று எனக்கு ஆசையில்லை. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்துவதுதான் எனது ஒரே நோக்கம். அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
இந்தியா கூட்டணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவு செய்வதற்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த குழுக்களுக்கு நானும் எனது ஆலோசனைகளை தெரிவித்துவருகிறேன்' என்றார்.
மாநில மந்திரிசபை விரிவாக்கம்? பீகார் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து நிருபர்கள் கேட்டபோது, 'இதை துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவிடம் கேளுங்கள்' என்று கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலிக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி தெரிவித்த அநாகரிக கருத்துகள் குறித்த கேள்விக்கு, 'இந்த விவகாரத்தை விட்டுவிடலாம். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்காகவும்தான் எங்கள் அரசு பாடுபட்டுக்கொண்டிருக்கிறது' என்றார்.
'கெஞ்சிக்கேட்டாலும் சேர்க்க மாட்டோம்':
பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப மாட்டோம் என்று நிதிஷ்குமார் கூறியது குறித்து பா.ஜ.க. தலைவரும், நிதிஷ்குமார் அரசில் முன்பு துணை முதல்-மந்திரியாக இருந்தவருமான சுஷில்குமார் மோடியிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், 'நிதிஷ்குமார் தற்போது அரசியல் சுமையாகிவிட்டார். அவரால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது.
அவரை நாங்கள் மீண்டும் ஏன் எங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும்? அவருக்கான அனைத்து கதவுகளும் அடைபட்டுவிட்டன.
நிதிஷ்குமார் தரையில் விழுந்து உருண்டு புரண்டு கெஞ்சிக்கேட்டாலும் நாங்கள் சேர்த்துக்கொள்ள மாட்டோம்' என்றார்.