இலங்கையில் அச்சுறுத்தும் நோய் தொற்று
24 புரட்டாசி 2023 ஞாயிறு 02:56 | பார்வைகள் : 4291
இலங்கையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் மட்டும் நாட்டில் 2003 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த மாதங்களை விட இம்மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என சுகாதார திணைக்களம் முன்னரே கணித்திருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், இம்மாதம் மூன்றாவது வாரத்தில், டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,881 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை ஏழாக குறைந்துள்ள போதிலும், தற்போதைய மழை நிலைமையுடன் எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.