இந்திய - கனேடிய சர்ச்சை வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பொருளாதார மோதலுக்கு வழி வகுக்குமா?
24 புரட்டாசி 2023 ஞாயிறு 09:49 | பார்வைகள் : 2416
* சீக்கியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் புது டில்லிக்கு கடுமையாக எரிச்சலை தோற்றுவித்தது!
* சீனாவும் ரஷ்யாவும் மோதலை வித்தியாசமாகப் பார்க்கும்!
* இரு தரப்பு மோதல் குறுகிய காலத்தில் பூகோள அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும்!
* பேச்சுக்கள் மற்றும் இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும்,மோதலில் அல்ல
கனடாவுக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான உறவில் முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள முறுகல் நிலை உலக நாடுகளை வெகுவாக திரும்பி பார்க்க வைத்துள்ளது. இரு தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக தங்கள் நாட்டிலுள்ள தூதரக அதிகாரிகளை பரஸ்பரம் வெளியேற்றியுள்ளமை நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மறுபுறம் இரு நாடுகளுக்குமான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலை எங்கே வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பொருளாதார ரீதியான மோதலாக உருவெடுத்து விடுமோ? என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள்
அண்மையில் புதுடில்லியில் நடந்த ஜி 20 உச்சி மாநாடில் கனேடியப் பிரதமருக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், அவர் பிரதமர் மோடி வழங்கிய விருந்துபசாரத்தில் பங்கு கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் முக்கியமானது ட்ரூடோ - மோடி சந்திப்பு. இருவருமே ஒருவரை ஒருவர் தவிர்த்துக் கொள்ளும் வகையில் நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பிரதமர் ட்ரூடோ பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, டெல்லியில் மேலும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பதிலாக ஏர் இந்திய விமான சேவை அவருக்கு விமானத்தை வழங்க முன்வந்த போதிலும் அதனை ட்ரூடோ ஏற்றுக்கொள்ள மறுத்து தனது விடுதியிலுள்ள அறையிலேயே தங்கி இருந்துள்ளார். அதனை விட்டு அவர் வெளிவரவில்லை.
இந்திய - கனேடிய சர்ச்சைக்கு அடிப்படைக் காரணம் என்ன?
கனடாவைச் சேர்ந்த சீக்கிய மதத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததுடன் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, இந்திய உளவு அமைப்புடன் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டி கனடா வெளியேற்றியுள்ளது. கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்ததுடன் இந்தியாவிலுள்ள கனேடிய தூதரகத்தின் மூத்த அதிகாரியை 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுவே பிரச்சினை பூதாகரமாக ஆரம்பப் புள்ளியாகும் .
இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் 'மிகவும் கவலைக்குரியது' என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. கனேடியப் பிரஜையும் முக்கிய சீக்கிய தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் முகமூடி அணிந்த இருவரால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவை தொடர்புபடுத்தும் "நம்பகரமான குற்றச்சாட்டுகளை" கனடா விசாரித்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதை அடுத்தே , இராஜதந்திர வெளியேற்றங்கள் நடந்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை (18) கனேடிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடிய குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கும் இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதாகவும் கனேடிய பாதுகாப்பு முகவர்கள் கடந்த பல வாரங்கள் நடத்திய விசாரணைகளை அடுத்து இந்த நம்பகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளதாகவும் கூறினார் . "இந்தக் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டறிய " தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், கனேடிய மண்ணில் ஒரு கனேடிய குடிமகன் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் நமது இறையாண்மையை பாதிக்கும் அது ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும்,” என்றும் ட்ரூடோ கூறினார்.
முன்னைய கசப்பான சம்பவங்கள் !
முன்னைய இரு சந்தர்ப்பங்களில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரு கசப்பான சம்பவங்கள் பதிவான போதிலும் அது இந்தளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 1974 மற்றும் 1998 இல் இந்திய அணுசக்தி சோதனைகளுக்கு கனடா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்ததை அடுத்து, ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு கனேடிய சீக்கியர்களை 2005 இல் கனடா விடுவித்தது. இதன் போது இந்தியா தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.
காலிஸ்தான் பிரச்சினையைத் தவிர, இரு நாடுகளும் பெரும்பாலும் நல்லுறவைப் பேணி வந்தன. குறிப்பாக புவிசார் அரசியலில் இந்தியாவை சீனாவிற்கு எதிர் எடையாக கனடா பார்ப்பதுமல்லாது, வலுவான வர்த்தக இணைப்புகளையும் கொண்டுள்ளன. மேலும், இரண்டு நாடுகளும் பொதுநலவாய நாடுகள் அணியில் அங்கம் வகிப்பதுடன் ஜி 20 குழுவின் உறுப்பினர்களாகவும் ஆசியாவில் ஒரு பெரிய தடத்தை கொண்டு விளங்குகின்றன.
இந்நிலையில், புதுடில்லியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய நிலையிலேயே ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டு அமைந்திருந்தது. மறுபுறம் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆரோக்கியமானதாக அமையவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தப் பின்னணியில், "சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரி அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டார் " "தங்கள் உள்விவகாரங்களில் கனேடிய தூதர்களின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்களின் ஈடுபாடு குறித்து இந்திய அரசின் கவலையை இந்த முடிவு பிரதிபலிப்பதாக அமைந்தது”. ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் அது "அபத்தமானது" என்றும் இந்தியா செவ்வாயன்று கூறியது. மேலும், "நாங்கள் ஒரு ஜனநாயக அரசியல் சட்டத்தின் ஆட்சிக்கு வலுவான அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்," என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவும், ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது கவலையை வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை "ஆழ்ந்த கவலையில் உள்ளது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் இயக்கம் இந்தியாவில் சட்டவிரோதமானது மட்டுமன்றி இந்திய அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. குறித்த இயக்கத்துடன் தொடர்புடைய பல குழுக்கள் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் "பயங்கரவாத அமைப்புகளாக" பட்டியலிடப்பட்டுள்ளன.
2020 இல் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம், "காலிஸ்தானை உருவாக்குவதற்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள சீக்கிய சமூகத்தை தீவிரமயமாக்க முயற்சிப்பதாக" குற்றம் சாட்டியது. மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் "பிரிவினைக்கு ஆதரவாக சீக்கியர்களைத் தூண்டிவிட்டு, இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி மற்றும் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றார்" என்று குற்றம் சாட்டியது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை தொடர்ந்து அச்சுறுத்தும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் இந்த விட யத்தில் கனேடிய அரசாங்கத்தின் செயலற்ற தன்மை நீண்ட கால மற்றும் தொடர்ச்சியான கவலையை தோற்றுவித்துள்ளது என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கனடாவில் உள்ள தீவிரவாதக் கூறுகள் " பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய-விரோத நடவடிக்கைகள் தொடர்வது குறித்து மிகுந்த கவலை கொள்வதாகவும் இந்திய அரசாங்கம் கூறிவரும் நிலையில், கனடா அது தொடர்பாக கவலை கொள்ளாதிருப்பதாகவும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மௌனம் சாதிப்பதாகவும் இந்திய தரப்பில் நீண்ட கவலை உள்ளது.
குறித்த காலிஸ்தான் அமைப்பு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற கணிசமான சீக்கிய சனத்தொகை கொண்ட நாடுகள் உட்பட புலம்பெயர் மக்களிடையே ஆதரவைக் கொண்டுள்ளது. கனடாவில் 770,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர், இந்தியாவிற்கு வெளியே மிகப்பெரிய மக்கள் தொகையாக இது காணப்படுகிறது. அந்த மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் காலிஸ்தான் அமைப்பை தீவிரமாக ஆதரிக்கின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில், 2019 இல் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட சீக்கியர்களுக்கான குழுவானது 'வாக்களிப்பு பயிற்சி நடத்தியது, இது காலிஸ்தான் மீதான "வாக்கெடுப்பு" என்று அழைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கனடாவில் ஆயிரக்கணக்கானோர் இதற்கு ஆதரவாக வாக்களித்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தனது விமர்சனத்தில் ,"தீவிரவாதிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களால் கேலிக்கூத்து பயிற்சி நடத்தப்பட்டது" என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் கனடாவுடன் "இராஜதந்திர வழிகள் மூலம்" விவாதிக்கப்பட்டது என்று பிரிட்டனின் இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மார்ச் மாதம், லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தியக் கொடியை அகற்றி விட்டு, கட்டிடத்தின் கூரையில் காலிஸ்தான் கொடியை ஏற்றினர். இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கு ஆத்திரத்தை ஊட்டியதுடன் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் லண்டனில் "பிரிவினைவாத மற்றும் தீவிரவாத சக்திகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு வலுவான எதிர்ப்பை" தெரிவிக்கும் ஒரு வெளியீட்டை வெளியிடுவதற்கு காரணமாக அமைந்தது மற்றும் இதில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து விசாரணைக்கு உட்படுத்துமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்தை வலியுறுத்தியது.
கனேடிய பிரதமரின் செயலுக்கு அரசியல் காரணமா?
இந்தியாவின் பஞ்சாப்க்கு வெளியே, உலகில் கனடாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சீக்கியர்கள் உள்ளனர். சீக்கியர்கள் அதிகமான அளவில் காணப்படுவதனால் அவர்களின் வாக்குகளை குறிவைத்து கனேடிய அரசு இந்த விதமாக செயற்பட்டிருக்கலாம் என்பது இந்திய தரப்பினரது வாதமாகவுள்ளது. மறுபுறம் கனடாவில் கருத்து சுதந்திரம் மதிப்பளிக்கப்படும் அதேவேளை, மக்களின் பாதுகாப்பு விடயத்தில் அந்நிய சக்திகளின் சவால்களுக்கு இடமளிக்க முடியாது என்பது கனேடிய தரப்பு வாதம்.
புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் பலரும் தங்கள் உரிமைகள் தொடர்பில் கனடாவிலிருந்து குரல் கொடுப்பதாகவும், அவர்கள் விடயத்தில் கனடா மெத்தன போக்கைக் கடைபிடிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இன்று, சீக்கியர்கள் கனேடிய சமூகத்திலும் அரசியலிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் இந்தியாவில் சீக்கியர்களை நடத்துவது குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். மேலும், அவரது பொது அறிக்கைகள் காரணமாக 2013 இல் நாட்டிற்குச் செல்ல விசா மறுக்கப்பட்டது.
இந்நிலையில். ட்ரூடோ 2015 இல் தனது அமைச்சரவையில் நான்கு சீக்கியர்களை நியமித்ததன் மூலம் அதிகம் பேசப்பட்டார். அந்த நேரத்தில் இந்தியாவின் அமைச்சரவையில் இருந்த இரண்டு சீக்கிய உறுப்பினர்கள் தொடர்பில் ட்ரூடோ பெருமையாகப் பேசியதாக கூறப்படுகிறது.
காலிஸ்தான் இயக்கத்தின் தோற்றம்
1947 ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் சீக்கியர்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு தேசத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர.மேலும், அரசியல் மற்றும் கலாசார சுயாட்சிக்காக ஒரு பெரிய போராட்டத்தைத் தொடங்கினர். இந்நிலையில் தான் காலிஸ்தான் இயக்கம் முக்கியத்துவம் பெற்றது.
காலிஸ்தான் என்ற சொல்லுக்கு "கல்சாவின் நிலம்" அல்லது "தூய்மையானது" என்று பொருள். உலகளவில் சுமார் 26 மில்லியன் சீக்கியர்கள் உள்ளனர். அவர்களில் 24 மில்லியன் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். சீக்கியர்கள் இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 1.7 சதவிகிதம் உள்ளனர். இவர்கள் பஞ்சாப் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர்.
சீக்கிய மதம் 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய தர்ம சமயமாகும். மனித குலத்தின் ஒற்றுமை மற்றும் தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவது, அனைவரின் நலனுக்கும் சமூக நீதிக்காகவும் போராடுவது, மற்றும் நேர்மையான நடத்தை ஆகியவற்றை பொதுவாக வலியுறுத்துகிறது.இது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த குருநானக் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சமயமாகும்.இச்சமயம் குரு நானக்கிற்குப் பின்னர் தோன்றிய பத்து சீக்கிய சீடர்களால் முன்னெடுக்கப்பட்டது . தற்போது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக இது விளங்குகிறது. காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் இந்தியாவில் சீக்கியர்கள் மத்தியில் சில ஆதரவைக் கொண்டுள்ளது.
பல ஆண்டுகளாக, குறித்த இயக்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்து, பல உயிர்கள் பலியாகின. இந்நிலையில், 1984 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி சீக்கிய பிரிவினைவாதிகள் 5 ஆண்டு காலம் அடைக்கலம் புகுந்திருந்த - சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலை முற்றுகையிட இந்தியப் படைகளுக்கு உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை சீக்கிய சமூகத்தினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதன் போது வெடித்த வன்முறைகளில் 3000 க்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னரான அடுத்த ஆண்டு, லண்டனில் நிறுத்தப்பட்டிருந்த “ஏர் இந்தியா விமானம்” 182 இல் கனடாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்த நிலையில் குண்டு வெடித்தது. இதில் பயணித்த 329 பயணிகளும் கொல்லப்பட்டனர். இது கனேடிய வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக அமைந்தது. இந்தக் குண்டுவெடிப்பில் சீக்கிய தீவிரவாதி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியாவிற்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விழிப்பாக இருக்கும் அதேவேளையில், இந்த அமைப்பு உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்த நாடுகளில், குறிப்பாக கனடா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள சில சீக்கியர்களிடம் அனுதாப அலையை தூண்டுகிறது என்பது இந்திய தரப்பின் குற்றச்சாட்டாகும்.
சில சீக்கியர்கள் ஏன் தனி நாடு கோருகிறார்கள்?
1980 களில் இந்தியாவில் ஆயுதமேந்திய காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அது முடக்கப்பட்டது. காலிஸ்தான் இயக்கம் இப்போது பஞ்சாபில் முக்கியத்துவம் பெறவில்லை. மேலும், அனைத்து முக்கிய இந்திய அரசியல் கட்சிகளும் இதை எதிர்த்து குரல் எழுப்புகின்றன. ஆனால் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த சீக்கியர்களிடையே காலிஸ்தானுக்கான அழைப்புகள் இன்னும் பலமாக உள்ளன.
இந்த நாடுகளில் சீக்கிய ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் புது டில்லிக்கு கடுமையாக எரிச்சலை தோற்றுவித்தது. எனினும், மேலைத்தேய நாடுகளில் இது சட்டவிரோதமானது அல்ல. இந்நிலையில் வெவ்வேறு நாடுகளில் மூன்று காலிஸ்தான் சார்பு ஆர்வலர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட விவகாரம் உலகளாவிய கவனத்தைப் பெற்றது.
இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவரான பரம்ஜித் சிங் பஞ்வார், மே மாதம் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இங்கிலாந்தில், காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் என்று கூறப்படும் அவதார் சிங் கந்தா, ஜூன் 15 அன்று வைத்தியசாலையில் உயிரிழந்தார். கடந்த மார்ச் மாதம் லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அந்த நாட்டு தூதரகத்தில் இந்தியக் கொடியை அகற்றிய போராட்டத்தின் பின்னர் கந்தா கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த மரணம் "சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை" என்று பிரித்தானிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர் இறந்த மூன்று நாட்களுக்குப் பின்னர் , இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு சீக்கிய கோவிலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைதான் இப்போது கனடா , ஒரு சக்தி வாய்ந்த நண்பனுக்கு எதிராக வலுவான பொது நிலைப்பாட்டை எடுக்க வழிவகுத்தது.
இந்திய - கனேடிய வர்த்தகம்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நோக்கில் இரு நாடுகளும் முன்னேறி வந்தன. இந்நிலையில் தற்போது இந்த பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டு, இந்தியாவுக்கான கனேடிய வர்த்தகப் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடா துணைத் தூதரகத்தின் அதிகாரபூர்வ தகவலின்படி, இந்தியாவில் இருந்து கனடாவுக்கு ஆண்டுக்கு 370 கோடி ரூபாய் வர்த்தகமும் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு 277 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி வர்த்தகமும் நடைபெறுகிறது. இதில் கனடாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் வணிக ரீதியாக தொடர்புகள் அதிகம் உள்ளன.
2022 ஆம் ஆண்டில் கனடாவின் 10ஆவது பெரிய வர்த்தகப் பங்கு தரராக இந்தியா விளங்கியது. அந்த ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் டொலர் 11.9 பில்லியன் ஆகும். இது முன்னைய ஆண்டை விட 56% அதிகமாகும். இந்தப் பின்னணியிலேயே இரு நாடுகளும் அந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மிக நெருக்கமாக இருந்தனர்.
பயண எச்சரிக்கை
இதற்கிடையே, தனது நோக்கம் இந்தியாவை எதிர்ப்பது அல்ல என்றும், மாறாக இந்தியாவுடன் இணைந்து இந்தப் பிரச்சினையை சீர் செய்ய விரும்புவதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார். இந்த விவகாரத்துக்குப் பின்னர் கனடா அரசு தனது இணையதளத்தில் நாட்டு மக்களுக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிற்கு பயணம் செய்யும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது .இந்தப் பயண வழிகாட்டியில், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு கனேடிய மக்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடாவில் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகள், அரசியல் ரீதியான வெறுப்புணர்வுகள் குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகள் என்பன அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து இந்தியப் பிரஜைகளும் அந்த நாட்டுக்கு பயணிக்க உத்தேசித்துள்ளவர்களும் அதிக பட்ச எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினையால் யாருக்குப் பாதிப்பு?
கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக பல்வேறு காரணங்களால் இந்தியாவில் இருந்து அதிகப்படியானோர் கனடாவை தெரிவு செய்கின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு, 40 ஆயிரம் பேருக்கு மேல் கனடா செல்கின்றனர்.
“இந்தியா – கனடா பிரச்சினை தீவிரமடைந்து, கனடா இந்தியாவில் உள்ளோருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை அங்கு இந்தியர்களுக்கு விசா தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பாதிப்புகள் ஏற்படும்,” என்பது ஒரு சாராரின் கணிப்பு.
இதேவேளை,வொஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தின் தெற்காசியா நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில்,
"மேற்கத்திய பங்காளிகளுடன் இந்தியாவின் நெருங்கிய உறவுகளில் புனிதமானது எதுவும் இல்லை என்பதற்கு இது ஒரு சிறந்த பாடம் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு எச்சரிக்கையான விடயமும் கூட, ஆனால் தெற்கில், அணிசேரா நாடானா இந்தியா, உலக நாடுகளுடனான அதன் உறவுகளை மதிக்கிறது. நிச்சயமாக மேற்கு நாடுகளுடனான அதன் உறவுகளையும் மதிக்கும். எனினும், அந்த உறவுகளில் ஒரு பாரிய நெருக்கடியின் சாத்தியக்கூறுகளிலிருந்து தனிமைப்படுத்தப்படும் என்று அர்த்தமல்ல" என தெரிவித்துள்ளார்.
கியூபெக் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் கனேடிய பிரதமர் விரும்புவாரா?
கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தோ-பசிபிக் ஸ்டடீஸின் நிறுவனர் சிந்தாமணி மஹாபத்ரா, கூறுகையில் (Chintamani Mahapatra, founder of the Kalinga Institute of Indo-Pacific Studies, ) காலிஸ்தான் விவகாரத்தில் ட்ரூடோவின் அறிக்கைகள் "பிளவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கனேடிய சீக்கியர்களை உள்ளடக்கிய பெரிய இந்தோ-கனேடிய சமூகத்தின் உணர்வுகளை அவர் புறக்கணிக்கிறார். மேலும், காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாகத் தோன்றுகிறார். கியூபெக் பிரிவினைவாதிகளுக்கு வெளிப்புற ஆதரவை அவர் விரும்புவாரா? நிச்சயமாக இல்லை. ட்ரூடோவால் இந்தியாவும் கனடாவும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளன".
"ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில், கனடா மற்றைய நாடுகளுடனான அதன் உறவுகளை பாதிக்கக் கூடாது." என்று கூறுகிறார்.
இதேவேளை, சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர் பி.பி.சி. க்கு வழங்கிய செவ்வி ஒன்றில்,
“கனடா - இந்திய உறவுகளைப் பொறுத்தவரை இரு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று, மக்களை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா கனடாவிலிருந்து 60 மில்லியன் டொலர் அளவுக்கு உள்ளது. ஏற்றுமதி 50 மில்லியன் டொலர் அளவுக்கு உள்ளது. உலகப் பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறி கொண்டிருக்கும்போது, இது போன்ற ஒரு பின்னடைவு இரண்டு நாடுகளுக்குமே நல்லதல்ல. இதில் பாதிப்பு இந்தியாவுக்கு அதிகமாக இருக்கும்.
இந்தியா ஒருவரைப் பயங்கரவாதியாகக் கருதும்போது அவருக்கு கனடா அடைக்கலம் கொடுத்திருப்பது சரியா? இந்தக் கேள்வியை கனடா நாட்டின் பார்வையிலிருந்தும் பார்க்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
உலகின் பார்வையில் இந்திய - கனேடிய மோதல்கள்
"கனேடிய பிரதமருக்கு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre உட்பட இதர உள்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. மேற்கு நாடுகளும் எதிர்வினையாற்றியுள்ளன. அமெரிக்கா இந்த குற்றச்சாட்டுகளால் "ஆழ்ந்த கவலை" அளிப்பதாக கூறுகிறது. அதேவேளை, பிரிட்டன் இந்த பிரச்சினையைஉன்னிப்பாக அவதானிப்பதாக கூறுகிறது. சர்வதேச செய்தி நிறுவனங்கள் இந்திய - கனேடிய சர்ச்சை தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்
மேற்கத்திய நாடுகள் சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதற்கு இந்தியாவை அவசியமாகக் கருதும் அதேவேளையில், இந்திய அரசியலின் இந்த விதமான போக்கு குறித்த கவலையும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், இதர மனித உரிமைகள் தொடர்பிலும் கவலைகளை எழுப்புவதாகவும் கூறுகின்றனர்.
இந்த முன்னேற்றங்களை பீஜிங் மற்றும் மொஸ்கோ உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இது "இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே பிளவு" உருவாவதைக் கண்டு மகிழ்ச்சியடையும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், இது "மூலோபாயபோக்கை தடம் புரளச் செய்யாது" என்று கூறுகின்றனர்.
சீனாவும் ரஷ்யாவும் மோதலை வித்தியாசமாகப் பார்க்கும் என்று குகல்மேன் கூறுகிறார். "சீனாவிற்கு எதிராக அதனை பின் தள்ள விரும்பும் ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் இந்தியா உறவுகளை விரிவுபடுத்துவதையும் ஆழப்படுத்துவதையும் பீஜிங் விரும்பவில்லை. எனவே, இது பீஜிங்கிற்கு ஒரு மூலோபாய நன்மையாகக் கருதப்படலாம். கனடா சிக்கியிருப்பதைக் கண்டு ரஷ்யா முற்றிலும் மகிழ்ச்சியடையக்கூடும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியா-கனடா மோதல் குறுகிய காலத்தில் பூகோள அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். கனடா தொடர்ந்து கடுமையான அறிக்கைகளை வெளியிட்டு, இந்தியாவை நேரடியாகக் குற்றம் சாட்டினால், அது மேற்கத்தேய அரசாங்கங்களுக்கு குறிப்பாக, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு ஒரு தனித்துவமான சவாலை முன்வைக்கும் என்று கூறும் அரசியல் விமர்சகர்கள், அண்மையில் ஜி 20 உச்சிமாநாட்டில் மேற்கு நாடுகள் டெல்லியை ஆதரித்த விதம், சீனாவுக்கு எதிராக இந்தியா ஒரு சாத்தியமான சக்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
ஆனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகுமானால் அது அவர்களுக்கு ஒரு மூலோபாய தலைவலியாக இருக்கும். இதுவரை, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை கணக்கிடப்பட்ட அறிக்கைகளை வழங்கியுள்ளன. ஆனால் இந்தியாவும் கனடாவும் மேற்குலகிற்கு புவிசார் அரசியல் சவாலைத் தவிர்க்க இன்னும் தங்கள் வேறுபாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
மேலும், காலிஸ்தான் பிரச்சினை குறுகிய காலத்தில் பொருளாதார ஒத்துழைப்பை பாதிக்கும் என்றாலும், நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால உறவுகளை அது சிதைக்க வாய்ப்பில்லை."ஒரு இராஜதந்திரியை வெளியேற்றுவது என்பது இரு தரப்பும் ஓர் உரையாடலை விரும்பவில்லை'" என்பதையே குறிக்கிறது. மாறாக இது போன்ற பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும், மோதலில் அல்ல," என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தி மட்டுமல்ல - உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும் மாறியுள்ளது. மேலும், இந்தியா, சீனாவுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய அரணாகவே மேற்குலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. இந்தப் பின்னணியில், மேற்கு நாடுகள் இந்தியாவுக்கு சார்பாக கனடாவையோ, கனடாவுக்கு சார்பாக இந்தியாவையோ பகைக்கும் நிலையில் இல்லை. அனைத்துப் பிரச்சினைகளும் இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலேயே அவர்களின் கவனம் செறிந்துள்ளது. மாறாக இருதரப்புக்கும் இடையிலான மோதலாகவோ ஒரு பாரிய விரிசலாகவோ சீன, ரஷ்ய, வடகொரியா ஆகிய நாடுகள் கருதினால் அது மிகுந்த ஏமாற்றமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஜி 20 மாநாட்டில் கனடா உட்பட அனைத்து நாடுகளும் ஒன்று திரண்டமை இதனையே வெளிப்படுத்துகிறது.
நன்றி வீரகேசரி