Paristamil Navigation Paristamil advert login

சத்தான... கேழ்வரகு புட்டு

சத்தான... கேழ்வரகு புட்டு

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 12661


 நம் முன்னோர்களின் ஆரோக்கியத்தின் இரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் தங்களது உணவில் தானியங்களை அதிகம் சேர்த்து வந்ததால் தான். குறிப்பாக கேழ்வரகு என்னும் ராகியை கூழ் செய்து காலையில் உட்கொண்டு வருவார்கள். ஆனால் இந்த கேழ்வரகை கூழ் செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள். எனவே அவர்களை கேழ்வரகு சாப்பிட வைக்க ஒரு சிறந்த வழி தான் அதனைக் கொண்டு புட்டு செய்து கொடுப்பது. இந்த புட்டு மிகவும் சத்தானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த சத்தான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். 

 
தேவையான பொருட்கள்: 
 
கேழ்வரகு மாவு - 3 கப்
 சர்க்கரை - 1 கப்
 உப்பு - 1/2 டீஸ்பூன் 
தேங்காய் - 1/2 மூடி (துருவிக் கொள்ளவும்) 
நெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் கோழ்வரகு மாவு மற்றும் உப்பு போட்டு, லேசாக தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கொதிக்க விட வேண்டும். 
 
அதற்குள் ஒரு இட்லி துணியை நீரில் நனைத்து நீரை முற்றிலும் பிழிந்து, இட்லி தட்டில் விரித்து, பிரட்டி வைத்துள்ள கேழ்வரகு கலவையை இட்லி தட்டில் பரப்பி விட வேண்டும். 
 
இட்லி பாத்திரத்தில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சூடாக இருக்கும் போதே அத்துடன் சர்க்கரை, தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சத்தான கேழ்வரகு புட்டு ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்