Paristamil Navigation Paristamil advert login

அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க செபி தயங்குகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க செபி தயங்குகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

28 புரட்டாசி 2023 வியாழன் 06:33 | பார்வைகள் : 2904


அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க செபி தயங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு மற்றும் அதைத்தொடர்ந்து வெளியாகி வரும் பல்வேறு புகார்கள் தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த புகார்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் அதானியுடன் தொடர்புடைய போலி நிறுவனமான 'ஓபல் இன்வெஸ்ட்மென்ட்' நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக வெளியாகி இருக்கும் செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி மீண்டும் இந்த விவகாரத்தை காங்கிரஸ் எழுப்பி இருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

தனிநபர் நிறுவனம் 

அதானி பவர் நிறுவனத்தில் ரூ.8,000 கோடி மதிப்புள்ள பங்குகளை கட்டுப்படுத்தும் நிறுவனம், 2019-ம் ஆண்டு மே மாதத்தில் துபாயில் ஒரு "தனி நபர் நிறுவனமாக" நிறுவப்பட்டது என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இது பல்வேறு தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவர் நிறுவனத்தில் ரூ.8,000 கோடி மதிப்புள்ள 4.7 சதவீத பங்குகளை துபாயில் உள்ள ஒரு தனி நபர் நிறுவனம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?

நாடாளுமன்ற கூட்டுக்குழு 

ஓபல் நிறுவனம் இந்திய பத்திரச் சட்டங்களை அப்பட்டமாக மீறவில்லையா? அது ஏன் அவ்வாறு செய்கிறது? உண்மையில் இது யாருடைய நிதி? மே 2024-க்கு பிறகு பிரதமர் மோடியின் ஓய்வுத்திட்டங்கள் என்ன? 

இந்த புகார்கள் குறித்து விசாரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) தயங்குகிறது. அதானி மெகா ஊழலின் பின்னணியில் உள்ள முழு விவரங்களையும் விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பது மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்