குழந்தைகள் உங்கள் சொல்லை கேட்க வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்
28 புரட்டாசி 2023 வியாழன் 12:42 | பார்வைகள் : 2577
இன்று அனைத்து பெற்றோர்களுமே தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் சில சவால்களை எதிர்கொள்கின்றனர். குழந்தை வளர்ப்பது என்பது ஒரு கடினமான வேலை, உங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் நீங்கள் சிரமத்தை எதிர்கொண்டால், நீங்கள் மட்டும் இந்த சிரமத்தை எதிர்கொள்ளவில்லை என்பதை கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது இந்த பதிவில் நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் எதிர்கொள்ளும் சிரமத்தை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி பார்ப்போம்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்
குழந்தைகளை கண்டித்து நேர்வழி காட்டி ஒழுக்கமுடன் வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது அவர்களுடன் நேரம் செலவிடுவது. குழந்தைகள் உங்களை ஒரு வழிகாட்டியாக மட்டுமல்ல, அன்பின் பிறப்பிடமாகவும் கருதும் அளவுக்கு அவர்களுடன் நேரத்தை செலவிட்டு, அன்பு செலுத்துங்கள்.
குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் செலவிடும் நேரத்தை மதிக்கிறார்கள். அவர்களுடன் விளையாடுங்கள், அவர்களுடன் உரையாடுங்கள், அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்து, அதை கடைபிடியுங்கள்.
குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் குழந்தைகளின் வயது மற்றும் வளர்ச்சி கட்டத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வயதிலும் குழந்தைகள் வெவ்வேறு தேவைகள் மற்றும் திறன்களைக் கொண்டுள்ளனர். உங்கள் குழந்தைகளின் வயது மற்றும் வளர்ச்சி கட்டத்தைப் புரிந்துகொள்வது, அவர்களின் நடத்தையை எவ்வாறு சிறப்பாக புரிந்துகொள்வது மற்றும் கையாளுவது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.
அறிவுரை வழங்குங்கள்
குழந்தைகுளுக்கு பெற்றோர் அறிவுரை வழங்குவது மிகவும் அவசியமான ஒன்று தான். ஆனால், அறிவுரை வழங்குவதற்கு முன் பெற்றோர்கள் அவர்களது மனநிலையை அறிந்து அறிவுரை வழங்க வேண்டும். குழந்தைகள் உங்கள் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் முறையில், அதை மென்மையான மற்றும் ஊக்குவிக்கும் முறையில் கூறுங்கள். அவர்களை குறை கூறவோ, அவமானப்படுத்தவோ வேண்டாம்.
அன்பு செலுத்துங்கள்
எந்த ஒரு குழந்தையையும் அன்பினால் திருத்த முடியும். உங்கள் குழந்ந்தைகள் தோல்வியடையும்போது அல்லது சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது அவர்களின் பின்னால் இருங்கள். அது படிப்பாகவோ அல்லது விளையாட்டாக இருக்கலாம். குழந்தைகள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் இலக்குகளை அடையவும் உதவியாக இருங்கள்.