அதிகரிக்கும் சிறுநீரக பாதிப்பு: அறிகுறியும் எச்சரிக்கையும்!
28 புரட்டாசி 2023 வியாழன் 12:49 | பார்வைகள் : 2890
நாடு முழுவதும் சிறுநீரக பாதிப்பு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. சிறுநீரக பாதிப்பின் தாக்கம் மற்றும் அதைத் தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதனுடைய அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.
சிறுநீரக பாதிப்பு என்பது தற்போது வயது வரம்பின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக மாறியிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சிறுநீரகப் பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்றவர்களை விட, தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
சிறுநீரக பாதிப்பு ஏற்பட முக்கியப் பிரச்னைகளாக இருப்பது உடலுக்குத் தேவையான போதுமான அளவு குடிநீரை பருகாததும், தற்போதைய உணவுப் பழக்கமே சொல்லப்படுகிறது. தற்போது சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகுபவர்களில் 50 சதவீதம் பேர் இந்த இரண்டு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் உடலுக்குத் தேவைப்படுகிறது. மேலும், தேவையான அளவு உப்பை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் உப்பை சற்று குறைவாகவே எடுத்துக்கொள்வது சிறுநீரகப் பிரச்னை ஏற்படுவதை குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தும்.
மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சி.கே.டி எனும் சிறுநீரக கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முதல் அறிகுறியாகத் தெரிவது தூங்கி எழுந்தவுடன் முகம் வீக்கம் அடைவது, நடக்கும்பொழுது காலில் ஏற்படும் வீக்கம் ஆகியவை ஆகும். இந்த அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை உடல் முழுவதும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது அவசியம்.
குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையை பார்த்தோமானால் 2021ம் ஆண்டு சிறுநீரக பாதிப்புக்காக 2060 பேர் சிகிச்சை பெற்றனர். 2022ம் ஆண்டு 2600 பேர் சிகிச்சை பெற்றனர். நடப்பு ஆண்டின் 8 மாதங்களில் மட்டும் 3000 பேர் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஐந்து வருடத்துக்கு முன்பு ஒரு நாளைக்கு 4 முதல் 8 பேர் வரை மட்டுமே டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 70 முதல் 80 பேர் வரை டயாலிசிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.