Paristamil Navigation Paristamil advert login

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வைத் தந்ததா சித்தா ?- விமர்சனம்

பெற்றோர்களுக்கான  விழிப்புணர்வைத் தந்ததா சித்தா ?- விமர்சனம்

28 புரட்டாசி 2023 வியாழன் 14:15 | பார்வைகள் : 2930


பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய படங்களை சமீப காலங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. மிகவும் உணர்வுபூர்வமான மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய இப்படிப்பட்ட கதைகளை மக்களுக்கு ஒரு பாடமாக, கவனத்தை ஈர்க்கும் விதத்தில் கொடுத்தால் மட்டுமே வரவேற்பைப் பெற முடியும். மாறாக அதில் கமர்ஷியல் விஷயங்களைச் சேர்த்தால் அதுவே படத்திற்கு எதிராகவும் திரும்பிவிடும்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் இயக்குனர் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை உணர்வுபூர்வமாகக் கொண்டு சென்றுவிட்டு, கிளைமாக்சில் ஒரு பழி வாங்கும் கதையாக மாற்ற முயற்சித்து கொஞ்சம் தடுமாறி முயற்சித்திருக்கிறார்.

சித்தார்த் பழனி நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராகப் பணியாற்றுபவர். அவரது அண்ணன் அகால மரணமடைந்த நிலையில் அண்ணன் மகள் சஹஸ்ராஸ்ரீ மீது அதிக பாசத்துடன் இருக்கிறார். சஹஸ்ராவும், சித்தப்பா சித்தார்த்தை 'சித்தா சித்தா' என பாசத்தைப் பொழிகிறார். இந்நிலையில் சித்தார்த் நண்பர் ஒருவரின் அக்கா மகளான சிறுமியை சித்தார்த் பாலியல் துன்புறுத்தல் செய்தார் என கைதாகிறார். பின்னர் அவர் செய்யவில்லை என்பது தெரிந்து அவரை விடுவிக்கிறார்கள். அடுத்து சித்தார்த்தின் அண்ணன் மகள் சஹஸ்ராஸ்ரீ திடீரெனக் காணாமல் போகிறார். அவரை யாரோ கடத்திவிட்டார்கள் என்பது தெரிய வருகிறது. அவரைத் தேடி கிளம்புகிறார் சித்தார்த். சஹஸ்ரா கிடைத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இதுவரை தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் சித்தார்த் நடிப்பில் ஒரு மேன்மைத்தனம் இருக்கும். சராசரி இளைஞராக அவரது நடிப்பைப் பார்த்திருக்க முடியாது. ஆனால், இந்தப் படத்தில் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டிருக்கிறார். பழனியில் ஒரு சாதாரண இளைஞர் எப்படியிருப்பாரோ அப்படியே அந்த 'சித்தா' கதாபாத்திரத்தில் தன்னை பொருத்திக் கொண்டுள்ளார். அண்ணன் மகள் மீது பாசத்தைப் பொழிவதிலும், காதலி நிமிஷா சஜயனிடம் தன் நிலையைப் பற்றி சொல்வதிலும் உணர்வுபூர்வமாய் நடித்திருக்கிறார்.

படத்தின் கதாநாயகி நிமிஷா சஜயன் தான் என்றாலும் சிறுமி சஹஸ்ராஸ்ரீ தான் படம் முழுவதும் வருகிறார். கொஞ்சம் பெரிய கண்ணாடி, பெரிய புத்திசாலித்தனமில்லாத எதையும் ஒரு தயக்கத்துடன் செய்யும் ஒரு சிறுமி கதாபாத்திரம். எந்த ஒரு காட்சியிலும் சஹஸ்ரா நடிக்கிறார் என்று சொல்ல முடியாதபடி அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. இந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதில் இப்போதே அவரது பெயரை எழுதிவிடலாம்.

சித்தார்த், சஹஸ்ரா இடையிலான பாசக் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக அமைந்துவிட்டதால், சித்தார்த், நிமிஷா இடையிலான காதல் காட்சிகள் அமுங்கிப் போய்விடுகிறது. இடைவேளை வரை தான் நிமிஷா காட்சிகள் உள்ளன. அதன்பின் அவருக்கான முக்கியத்துவம் படத்தில் இல்லை. சஹஸ்ராவின் அம்மாவாக அஞ்சலி நாயர், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சித்தார்த்தின் நண்பராக எஸ்எஸ்ஐ ஆக நடித்திருக்கும் பாலாஜி, முயற்சித்தால் முக்கிய படங்களில் நடிக்கலாம். சிறுமிகளைக் கடத்தும் அந்த வில்லன், தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து போனவர். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பாடல்களுக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இன்னும் உணர்வுபுர்வமான பாடல்களைக் கொடுத்திருக்கலாம். பின்னணில் இசையில் விஷால் சந்திரசேகர் அவரது பங்கை சரியாகச் செய்திருக்கிறார். பழனி பகுதிகளை தன் கேமராவுக்குள் யதார்த்தமாய் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்.

இடைவேளை வரை திரைக்கதை கதையுடன் சேர்ந்து அழுத்தமாய் நகர்கிறது. இடைவேளைக்குப் பின்பு அதைவிட அழுத்தமாய் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம். பெரிய திருப்பங்கள் இல்லாமல் கொஞ்சம் தடுமாறிப் பயணிக்கிறது திரைக்கதை. படத்தை எப்படி முடிப்பது என்பதிலும் இயக்குனர் குழம்பியிருப்பது தெரிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்