மணிப்பூரில் மீண்டும் பதற்றம் - பள்ளிகளை மூட அரசு உத்தரவு
27 புரட்டாசி 2023 புதன் 12:02 | பார்வைகள் : 3726
மணிப்பூரில் மாணவர்கள் 2 பேர் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நீடித்து வந்த மோதல் கடந்த மே மாதம் 3-ந்தேதி பெரும் கலவரமாக வெடித்தது.
4 மாதங்களை கடந்தும் கலவரம் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த மாநிலத்திலேயே அகதிகளை போல் நிவாரண முகாம்களில் தங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் கடத்தி படுகொலை இந்தநிலையில் மெய்தி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் குகி இனத்தை சேர்ந்தவர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி நாட்டை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தலைநகர் இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் என்ற 20 வயது மாணவனும், ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி என்ற 17 வயது மாணவியும் கடந்த ஜூலை 6-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவர்களை தேடி வந்தனர்.
இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும், அவர்களது செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் முன்பு கூறியிருந்தனர்.
மாநிலம் முழுவதும் பதற்றம் தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில் பிஜாம் ஹேமன்ஜித் மற்றும் ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி ஆகிய இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் நேற்று முன்தினம் வெளியாகின.
அவர்களின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனிடையே மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு தலைநகர் இம்பால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கண்டன பேரணிகளை நடத்தினர்.
அப்போது பல இடங்களில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர். ஒரு சில இடங்களில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
போலீசாரின் இந்த நடவடிக்கையில் மாணவர்கள் 45 பேர் படுகாயம் அடைந்தனர். பள்ளிகளை மூட உத்தரவு இந்த நிலையில் மாநிலத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வெள்ளிக்கிழமை வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் விதமாக மணிப்பூர் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.