ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டி..
30 புரட்டாசி 2023 சனி 10:01 | பார்வைகள் : 2680
சீனாவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்கள் கிடைக்கக்கூடிய அறிகுறி தென்படுகிறது.
ஹங்ஸோ 2022 ஆசிய விளையாட்டு விழாவில் மிக முக்கிய நிகழ்ச்சியான மெய்வல்லுநர் போட்டிகள் வெள்ளிக்கிழமை (29) ஆரம்பமாகின.
இதில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் நடீஷா ராமநாயக்க, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமார, அருண தர்ஷன ஆகியோர் சனிக்கிழமை (30) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.
இதற்கு முன்னோடியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் 2ஆவது தகுதிகாண் சுற்றை 52.67 செக்கன்களில் நிறைவு செய்த நடீஷா ராமநாயக்க இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
பெண்களுக்கான 3 தகுதிகாண் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பிரகாரம் ஒட்டுமொத்த நிலையில் நடீஷா ராமநாயக்க 3ஆம் இடத்தில் இருக்கிறார்.
ஜப்பானின் ஃபியூகோ சாட்டோ (45.56 செக்) மாத்திரமே காலிங்க குமாரகேயைவிட சிறந்த நேரப் பெறுதியைக் கொண்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 0.01 செக்கனாகும்.
இதேவேளை, 400 மீற்றருக்கான 3ஆவது தகுதிகாண் சுற்றில் அருண தர்ஷன (46.07 செக்) 3ஆம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
இந்த மூவரில் நடீஷா ராமநாயக்கவும் காலிங்க குமாரகேயும் தத்தமது போட்டிகளில் கடுமையாக முயற்சித்தால் இலங்கைக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கோல்வ் போட்டியில் இலங்கை பின்னடைவு
வெஸ்ட் லேக் சர்வதேச கோல்வ் புற்தரையில் நடைபெற்றுவரும் கோல்வ் போட்டியில் இலங்கைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நான்கு சுற்றுகளைக் கொண்ட அணி நிலை கோல்வ் போட்டியில் இரண்டாம் சுற்று முடிவில் 431 நகர்வுகளுடன் இலங்கை 13ஆவது இடத்தில் உள்ளது.
முதலாம் சுற்றை 213 நகர்வுகளுடன் நிறைவுசெய்த இலங்கை கோல்வ் வீரர்கள் இரண்டாம் நாளன்று தடுமாற்றத்துக்கு மத்தியில் 5 வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தத் தவறினர்.
இலங்கை அணியினர் 8 குழிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நகர்வுகளிலும் பார்க்க ஒரு நகர்வு குறைவாக எடுத்துக்கொண்டு திறமையை வெளிப்படுத்திய போதிலும் மற்றைய குழிகளுக்கான நகர்வுகளில் இலங்கை வீரர்கள் நால்வரும் தவறுகளை இழைத்தனர்.
கோல்வ் அணியில் அநுர ரோஹன, என். தங்கராஜா, கே. பிரபாகரன், மிதுன் பெரேரா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.