வெங்காய ரவா தோசை.!
1 ஐப்பசி 2023 ஞாயிறு 09:22 | பார்வைகள் : 2890
சாதாரண தோசையைக் காட்டிலும் ரவா தோசை மிகவும் சுவையுள்ளதாக இருக்கும். இதற்கு காரசாரமாக சட்னி, சாம்பார் செய்ய வேண்டிய அவசியம் இல்லை வெறும் தேங்காய் சட்னி இருந்தாலே போதுமானது.
அதிலும் ஆங்காங்கே கிரன்ச்சியான வெங்காயத்துடன் இருக்கும்போது ஒரு வாய் எடுத்து சாப்பிட்டால் போதும். சுவை ஆளை அள்ளும். இந்த தோசை செய்வதற்கு மாவை அரைக்க தேவையில்லை. சுலபமாக சீக்கிரமாக வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே எப்படி ரவா தோசை சுடுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கீழே கொடுக்கப்பட்ட மாவுகளை கூறிய பதத்திற்கு கலந்து 15 முதல் 20 நிமிடங்கள் விட்டால் போதும். சீக்கிரமே நல்ல பிரேக்ஃபாஸ்டை நம்மால் தயாரிக்க முடியும்.
தேவையான பொருட்கள் :
ரவை மாவு (வறுக்கப்படாத) - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (மிகச் சிறியதாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகு - 9 முதல் 10
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கடுகு, சீரகம் - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு பவுலில் ரவை, அரிசி மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலக்கவும். அதனுடன் வெங்காயத்தை சேர்க்கவும்
ஒரு சிறிய ஃபிரை பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்த பின்னர் சீரகம் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பொந்நிறமாகும்வரை விடவும்.
பின்னர் சில கறிவேப்பிலை இலைகளை போட்டு பொரிந்ததும் அதனை கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
பின்னர் மாவை கரைப்பதற்கு தண்ணீர் அல்லது மோரை தேவையான அளவு ஊற்றி மிகவும் திக்காக இல்லாமல் நீர்த்தும் போகாத பக்குவத்தில் கலந்து கொள்ளுங்கள்.
ஒரு நான் - ஸ்டிக் தவாவில் எண்ணெயோ அல்லது வெங்காயத்தைக் கொண்டோ தவா முழுவதுமாக தடவிக் கொள்ளுங்கள்.
அதன்பின்னர் தவா சிறிது சூடானதும் மாவை தவாவின் ஓரத்திலிருந்து நடுப்பகுதிக்கு ஊற்றி தோசைமீது 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
பொந்நிறமாக வெந்ததும் திருப்பிப் போட்டு தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் போதும்.. வேறு எதுவுமே சாப்பிடத் தேவையிருக்காது.