Paristamil Navigation Paristamil advert login

'நிபா ' வைரஸ் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் : பேராசிரியர் நீலிகா மாளவிகே

'நிபா ' வைரஸ் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் : பேராசிரியர் நீலிகா மாளவிகே

1 ஐப்பசி 2023 ஞாயிறு 12:20 | பார்வைகள் : 2662


கொரோனா தொற்று போலல்லாமல் , வௌவால் மூலம் பரவும் நிபா வைரஸ் பரவும் அபாயம் குறைவு எனினும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவருமான பேராசிரியர் நீலிகா மாளவிகே ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி கூட கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிபா வைரஸ் பரவக்கூடிய சாத்தியம் உள்ளதா? அது தொடர்பில் பொதுமக்கள் அச்சப்பட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே பேராசிரியர் மாளவிகே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ மக்கள் பீதியடையவோ அல்லது ஏனையவர்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் செயல்படவோ கூடாது. விழிப்புடன் இருப்பது வேறு பகுத்தறிவற்ற முறையில் நடந்துகொள்வது வேறு. கண்காணிப்பு, தயார்நிலை மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுப்பது எப்படி என்பது மிக முக்கியமானதாக இருக்கும். நிபா வைரஸ் கொவிட்-19 அளவுக்கு பரவவில்லை என்றாலும், இது கொவிட்-19 ஐ விட கொடியது.

கேரளாவில், சுமார் 21 நிபா நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 33 வீதமானோர் உயிரிழந்துள்ளனர், கொவிட்-19 போலல்லாமல், இதன் அறிகுறிகளும் கடுமையானவை. தென்னை, கித்துல் மற்றும் பனை மரங்களின் பூக்களை அவற்றின் சாற்றைப் பிரித்தெடுக்கும் போது அவற்றை மூடி வைக்க வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ள நிலையில் இதனால் வௌவ்வால்களின் கழிவுகள் மற்றும் சிறுநீரால் மாசுபடுவதைத் தவிர்க்கலாம்," என அவர் தெரிவித்தார்.

இதேவேளை , லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் “ நிபா “ நோயாளிக்கு சிகிச்சை அளித்து வருவதாக குறிப்பிட்ட சமூகத் வலைத்தளம் ஒன்று பரப்பிய செய்தியில் உண்மையில்லை என குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,  “அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இல்லை. இவ்வாறான பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்” எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நிபா வைரஸ் குறித்த அச்சமின்றி மக்கள் வைத்தியசாலைக்குச் செல்லுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்